×

ஸ்டேஷனில் விசாரணை கைதி இறந்த வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்; ஜூன் 5ல் நெல்லை கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

அம்பை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த முத்தையா மகன் முருகன். இவரை கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லிடைக்குறிச்சி போலீசார் ஒரு திருட்டு வழக்கிற்காக கைது செய்தனர். விசாரணையின் போது முருகன் மர்மமாக இறந்தார். இதுகுறித்து அப்போதைய கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் கனகராஜ் மற்றும் போலீசார் மீனாட்சிசுந்தரம், வெற்றி செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்த முருகனின், மனைவி கிருஷ்ண லீலா தன் கணவரின் இறப்பு சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதன்படி அந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி விசாரணையில் விசாரணைக் கைதியாக வந்த முருகன் மர்மமாக இறந்த வழக்கில் அப்போது கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டராக இருந்து, தற்போதைய ராமநாதபுரம் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டராக உள்ள கனகராஜ், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அப்போதைய கல்லிடைக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி, மேலும் விருப்ப ஓய்வில் சென்ற எஸ்எஸ்ஐக்கள் முருகன், அடைக்கல அந்தோணி ஜேக்கப் மற்றும் தற்போது திருப்பூர் காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் மாரி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். முதலில் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த காவலர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் வெற்றிசெல்வம் விடுவிக்கப்பட்டனர். சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வருகிற ஜூன் 5ம் தேதி ஆஜராக அம்பை குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் உத்தரவு பிறப்பித்தார்.

The post ஸ்டேஷனில் விசாரணை கைதி இறந்த வழக்கு: இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்பட 5 பேர் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்; ஜூன் 5ல் நெல்லை கோர்ட்டில் ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCID ,SI ,Nelly ,Ambai ,Muttiah ,Murugan ,Vagaikulam ,Ambasamudram ,Nellai district ,Nellie ,Dinakaran ,
× RELATED மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...