×

ஆன்ம ஒழுக்கம் என்பது எது?

நன்றி குங்குமம் ஆன்மிகம்

ஸ்ரீகிருஷ்ண அமுதம் – 46 (பகவத்கீதை உரை)

யுதிஷ்டிரரை வறியவர் ஒருவர் அணுகினார். தனக்குக் குறிப்பிட்ட தொகையைத் தானமாக வழங்குமாறு கோரினார். யுதிஷ்டிரர், அவரை மறுநாளைக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். தானம் பெறுபவருக்குக் கோரிக்கை என்று இருக்கக்கூடாது என்று நினைத்தாரோ? எதைக் கொடுப்பது, எவ்வளவு கொடுப்பது, எப்படிக் கொடுப்பது என்பதெல்லாம் தானமளிப்பவரின் உரிமைதானே, இதைத் தானம் பெறுபவர் நிர்ணயம் செய்யலாமா என்றும் கருதினார் போலிருக்கிறது. நாளை வரச்சொன்னதைச் செவிமடுத்த, அருகேயிருந்த பீமன் பெருத்த சப்தம் போட்டுச் சிரித்தான். ‘இவன் இப்படி சிரிக்கும்படியாகத் தான் என்ன சொல்லிவிட்டோம்?’ என்று யுதிஷ்டிரராகிய தர்மருக்கு ஒன்றும் புரியவில்லை.

‘அண்ணா, தாங்கள்தான் எத்தகையதொரு மகான்! எத்தனை நம்பிக்கையோடு வந்த இந்த வறியவரை நாளைக்கு வரச் சொல்கிறீர்கள்!’ என்று கேலி வியப்புடன் கேட்டான்.

‘ஏன், நாளைக்கு இந்த வறியவர் இருக்கமாட்டார் என்கிறாயா பீமா?’ என்று அருகே இருந்தவர்களில் யாரோ கேட்டார்கள். இன்னும் பலமாகச் சிரித்தான் பீமன். ‘இவர் அல்ல, அண்ணன் யுதிஷ்டிரரே இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?’ என்று கேட்டு மேலும் சிரித்தான். உடனே மறுநாள் வருவதற்காகத் திரும்பிச் செல்ல யத்தனித்த அந்த வறியவரை வழிமறித்து, அவர்முன் தண்டனிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவருக்கு, தான் கொடுக்க நினைத்திருந்த பொருட்களை அள்ளிக் கொடுத்தார் யுதிஷ்டிரர்.

‘அண்ணா, என்னை மன்னித்துவிடுங்கள்,’ பீமன் அவரிடம் வருத்தம் தெரிவித்தான். ‘உங்களை மன உளைச்சலிலிருந்து விடுவிக்கவே நான் அப்படி நடந்துகொண்டேன்…’

‘என்ன சொல்கிறாய் நீ?’‘ஆமாம், அண்ணா. என்ன காரணத்தாலோ இந்த வறியவருக்கு நாளைக்கு தானம் அளிப்பதாக நீங்கள் தீர்மானித்து விட்டீர்கள். அவரைப் போகவும் சொல்லிவிட்டீர்கள். உங்களை அப்படிச் சொல்ல வைத்த தீய சக்தி எது என்று தெரியவில்லை. ஆனால், அவர் போன பிறகு உங்களால் நிம்மதியாக உறங்க முடியாது என்பது எனக்குத் தெரியும்.

அவருக்கு இன்றே, இப்போதே கொடுத்திருக்கலாமோ? அடடா, அவருக்கு என்ன கஷ்டமோ! என்னால் அது தீரும் என்று நம்பி வந்தவரை நான் வெறுங்கையராகத் திருப்பி அனுப்பி விட்டேனே! ஒருவேளை அவருடைய கஷ்டம் இன்றே தீர்க்கப்படவேண்டியதாக இருந்திருக்குமோ! என்னைப் பெரிதும் நம்பி வந்த அவருக்கு நான் தானம் மறுத்ததால், தன்னுடைய கஷ்டம் தீராத வேதனையில் அவர் எவ்வளவு துன்பப்படுவார், விரக்தியடைவார், ஏன் விபரீதமான எந்த முடிவுக்கும் அவர் போகலாமே!’ என்றெல்லாம் எண்ணி எண்ணி நீங்கள் வருந்துவீர்கள். அந்த வருத்தத்தை, வலியை, வேதனையை, தண்டனையை உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே நான் அவ்வாறு பேச வேண்டியதாகிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.’

யுதிஷ்டிரர், தன் இளைய சகோதரனை ஆரத்தழுவிக்கொண்டார். ஆக, இப்போதே செய்யவேண்டிய நற்செயலை, அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது எது? ரஜோகுணம்தான். அதாவது தனக்குள்ளேயே உறையும் எதிரி! ஒருவனை, பாபச் செயல் புரிய நிர்ப்பந்தப்படுத்தும் அந்த எதிரியை அடியோடு ஒழிக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன். நியாயமான, தர்ம நோக்குள்ள, சீரிய செயலாக்கத்துக்கு எந்த வகையிலாவது, யார் மூலமாவது, எந்தச் சூழ்நிலை காரணமாகவாவது இடையூறு ஏற்படுமானால், அந்த இடையூறை அனுமதித்து அதற்கேற்ப புத்தியை பேதலிக்கவிடும் பலவீனத்தை ஒருவன் அனுமதிக்கவேகூடாது என்று வலியுறுத்திச் சொல்கிறார் கிருஷ்ணன். காமம், குரோதம் எல்லாம் மிகுந்த நஷ்டங்களைத் தரவல்லவை.

இவை எல்லா நல்ல குணங்களையும் கபளீகரம் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவை. ஆகவே இவை அறவே நம் உள்ளத்தில் தோன்றாதபடி நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார்.

அடுத்து, ஆசையால் மூடப்பட்ட ஞானத்தைப் பற்றிப் பேசுகிறார் கிருஷ்ணன்:
தூமேனாவ்ரியதே வஹ்னிர்யதாதர்சோ மலேன ச
யதோல்பேனாவ்ருதோ கர்பஸ்ததா தேனேதமாவ்ருதம் (3:38)

‘‘உள்ளுக்குள்ளேயே கனன்று கொண்டிருப்பதுதான் ஞானம். அதை மூடியிருக்கும் ஆசையினை விலக்கினால் அது பூரணப் பொலிவுடன் விளங்கும். அது மூடி மறைக்கப்பட்டிருக்கும் தன்மை எத்தகையது? புகையால் தீப்பிழம்பு மூடப்பட்டிருப்பதுபோல; அழுக்கினால் கண்ணாடி மூடப்பட்டிருப்பதுபோல; தாயின் கருப்பையில் சிசு, மெல்லிய திசுப் போர்வையால் மூடப்பட்டிருப்பது போல!’’ ஞானம், தூய நெருப்பைப் போன்றது, கொழுந்துவிட்டு எரியும் நெருப்பைப் போன்றது. அது, புறச் சேர்க்கையான புகையால் மூடப்படுகிறது. இந்தப் புகை மூட்டம் விலகினால் ஜோதி பொலிவோடு தெரியும்.

ஒரு ஹோமம் இயற்றுகிறோம். அதில் ஜ்வாலை ஜகஜ்ஜோதியாக ஒளிர்கிறது. சுற்றிலும் புகை சூழ்ந்தாலும், ஒரு கட்டத்தில் அந்தப் புகையும் விலகி தீப்பிழம்பு தனித்துத் தெரியும். அதன் பிழம்புகள் மேலே தாவித் தாவி எழும்போதும், பக்கத்தில் வீசிப் பரவும்போதும் நம் ஆன்மிகக் கற்பனைக்கேற்றவாறு எத்தனை அற்புத வடிவங்களாக நமக்குத் தெரிகிறது! இது எதனால்? புகைகள் விலகுவதனால். இதேபோல, ஆசை என்ற புகை மூட்டம் விலகுமானால் ஞானமும் அற்புதமாகப் பரிமளிக்கும். தன் வீட்டு ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டைப் பார்த்தான் ஒருவன். ‘‘பக்கத்து வீட்டு ஜன்னல் திறந்திருக்கிறது. ஆனால், ஏன் அந்த அறையில் அவர்கள் இப்படி ஒரு மங்கலான விளக்கைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்? கொஞ்சம் ஒளி கூடிய பளிச்சென்ற விளக்கை எரியவிடக் கூடாதோ?’’ என்று கேட்டான்.

அவன் மனைவி அவனருகே வந்தாள். கணவனைப் போலவே தானும் தன் வீட்டு ஜன்னல் வழியாக பக்கத்து வீட்டைப் பார்த்தாள். பிறகு மெல்லச் சிரித்துக்கொண்டு உள்ளே போனாள். கையோடு ஒரு ஈரத்துணியைக் கொண்டு வந்தாள். தன் வீட்டு ஜன்னல் கண்ணாடியை அந்தத் துணியால் நன்றாகத் துடைத்தாள். ‘இப்போது பாருங்கள்,’ என்று கணவரிடம் சொன்னாள். கணவன் பார்த்தான்.

அட! பக்கத்து வீட்டு அறைதான் எவ்வளவு பளிச்சென்று இருக்கிறது. ஒளி மிகுந்த விளக்குதான் அவர்கள் வீட்டு அறையை எவ்வளவு பிரகாசமாக அலங்கரிக்கிறது! தன் குறையை அவன் உணர்ந்தான். அழுக்கு படிந்த தன் வீட்டு ஜன்னலின் கண்ணாடிக் கதவு உண்மையல்லாத ஒரு விஷயத்தை எப்படி மாயையாகக் காட்டிற்று! அழுக்கைத் துடைத்த பிறகு பளிச்சென்று அந்த உண்மைதான் எப்படி ஒளிமிகுந்து தெரிந்தது! தாயின் கருப்பைக்குள் கரு ஓர் அணுவாய் நுழைந்து, கொஞ்சம் கொஞ்சமாக வளர்கிறது.

ஆனால், அதனால் சுதந்திரமாக அங்குமிங்கும் அலைந்து திரிய முடியாது. அதைச்சுற்றி திசுப் போர்வை ஒன்று சூழ்ந்திருக்கிறது. அந்தப் போர்வைக்குள் அந்தக் கருவுக்கு வளர்ச்சி என்னவோ இருக்கும்தான். ஆனால், பிறப்பு என்ற ஞானம் அதற்கு எப்போது ஏற்படும்? குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அந்தத்திசுப் போர்வை கிழிபட்ட பிறகுதான்! அதுபோல மனதுக்குள் உருவாகும் ஞானமும் ஆசை என்ற மாயக் கவசத்தால் மூடப்பட்டிருக்கிறது. என்றைக்கு ஆசை முற்றிலுமாக விலகுகிறதோ, அன்றுதான் ஞானம் பூரணத்துவம் பெறும். இரண்டு பேர் உத்தமனான ஒரு மூன்றாம் நண்பனைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘‘அவன் ரொம்பவும் ஒழுக்கமானவன்,’’ என்றான் முதல் நண்பன்.
‘‘கெட்ட வழக்கம் எதுவும் இல்லாதவன் என்கிறாயா?’’ இரண்டாம் நண்பன் கேட்டான்.
‘‘ஆமாம், அதுமட்டுமல்ல, அவன் வசிக்கும் இடத்திலும் சரி, பணிபுரியும் அலுவலகத்திலும் சரி, எத்தனையோ பெண்களை அவன் தினமும் சந்திக்கிறான் என்றாலும் அவன் ஒழுக்கத்தி
லிருந்து என்றுமே வழுவியவன் இல்லை.’’

‘‘அதெப்படி உறுதியாகச் சொல்கிறாய்?’’
‘‘அதோ அங்கே மூன்று பெண்கள்…’’

இரண்டாம் நண்பன், அவன் சுட்டிக்காட்டிய திசை நோக்கி பளிச்சென்று திரும்பினான். முதல் நண்பன் அடக்கமாட்டாமல் சிரித்தான்.`‘அதோ, அங்கே மூன்று பெண்கள்…’ என்று நான் சொன்ன அந்தக் கணமே அந்த திக்கு நோக்கி நீ திரும்பினாயே, அவன் இப்படித் திரும்ப மாட்டான்! அதனால்தான் அவனை ஒழுக்கம் மிகுந்தவன் என்று நான் குறிப்பிட்டேன்.’’

இரண்டாம் நண்பன் அவமானத்தால் தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டான். ஒரு அலுவலகத்தில் ஐம்பது வயதுப் பெரியவர் ஒருவர் பணிபுரிந்துவந்தார். கொஞ்சம்கூட ஒழுக்கத்துக்கு மாறாக அவர் நடக்கமாட்டார். நேரம் தவறாமை, இருப்பிட சுத்தம், ஊழலுக்கு எதிர்ப்பு, உடன் பணியாற்றும் பெண்களை சகோதரிகளாகவே பாவிக்கும் பண்பு எல்லாம் நிறைந்திருந்தவர் அவர்.

யாராலும் எந்தக் குறையும் சொல்ல முடியாத சீர்மை அவருக்கு இருந்தது. ஆனால், இளம்பெண் ஊழியர் ஒருத்திக்கு மட்டும் அவர்மீது அளவு கடந்த எரிச்சல். அவள் இளமை ததும்பும் பேரழகிதான் என்றாலும், அவளிடம் அலுவலக ரீதியான முறையில்தான் அவர் பழகுவார். அவள் செய்திருக்கக்கூடிய சரியான பணிகளை உளமாரப் பாராட்டுவார், அதே சமயம் அவள் செய்யும் தவறுகளைக் கடுமையாகவே சுட்டிக் காட்டுவார். பாராட்டப்படும்போது மகிழும் அவள், விமர்சிக்கப்படும்போது மனம் குமைவாள். தான் சராசரிக்கும் மேற்பட்ட திறமைசாலி என்பதனால் அவர் கொண்டிருக்கும் அகம்பாவம் அது என்று அவரைப்பற்றி அவள் தவறாக நினைத்துக் கொண்டாள்.

அவரும் மனிதர்தானே, ஞானியாக ‘வேடம்’ தரிக்க என்ன காரணம் என்றெல்லாம் பலவாறாக அவள் யோசித்துப் பார்த்தாள். எப்படியாயினும் அவரைப் பழிவாங்கிவிடவேண்டும் என்று கோபத்தில் முடிவெடுத்தாள். சரியான வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் இவர் இப்படி ஒழுக்க சீலர் என்ற பட்டத்தைச் சுமக்கிறார் அல்லது நடிக்கிறார்.

இவரும் சபலமுடையவர்தான், மனத்தளவில் பலவீனர்தான் என்பதை நிரூபித்து இவரை அவமானப்படுத்துகிறேன் என்று சபதம் மேற்கொண்டாள். அவளுக்கு அந்த சந்தர்ப்பமும் வந்தது. ஒரு மாலை வேளையில் அலுவலகத்தில் அவர்கள் இருவரும் தனித்திருக்க வேண்டிய சூழல்.

இதை ஒரு ஆரம்பமாக வைத்து, இவரைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று அந்தப் பெண் நினைத்தாள். அவரை நெருங்கினாள். வழக்கம்போல எந்தச் சலனத்துக்கும் ஆட்படாதவராகிய அவர் தன் பணியில் ஆழ்ந்திருந்தார். அவள் பளிச்சென்று அவருடைய கரத்தைப் பற்றினாள். சற்றே நிமிர்ந்த அவர் அவளைக் கேலியாகப் பார்த்தார். அவளுடைய உள்ளக் கிடக்கையைப் புரிந்து கொண்டார். அவள் விருப்பப்படி அவளை அணைத்துக்கொண்டார். அடுத்தடுத்து திட்டமிட வேண்டியிருக்கும் என்று கருதியிருந்த அவளுக்கு, அவர் இவ்வாறு உடனே இணங்கியது சற்றும் எதிர்பாராதது.

வெறுமே அணைத்துக்கொண்டார்தான் என்றாலும், அதுவும் ஒழுக்க மீறல்தானே! ‘அட, இத்தனை பலவீனரா இவர்! இவரைப் போயா எல்லோரும் கொண்டாடுகிறார்கள்! இவரை ஒட்டுமொத்தமாகப் பழிவாங்கிவிடுகிறேன்,’ என்று மனதுக்குள் கறுவிக்கொண்டாள். மறுநாள் அலுவலகத்தில் அனைவரிடமும் அந்தப் பெரியவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று ஆரம்பித்து முந்தைய நாள் மாலைச் சம்பவத்தை விவரித்தாள்.

எல்லோரும் வியப்புடன் அவரைப் பார்த்தார்கள். அவர் வழக்கமான கம்பீரத்துடனும், ஒளிமிகுந்த கண்களோடும், தன் இயல்புத் தன்மை மாறாதவராகப் பணியில் ஆழ்ந்திருந்தார். எல்லோரும் அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பினார்கள். ‘‘இவரா நீ விவரித்தபடி உன்னிடம் நடந்துகொண்டார்? சத்தியமாக இருக்காது. நீயாகக் கற்பனை செய்துகொண்டிருக்கிறாய். இவர் மீது உனக்கிருக்கும் கோபம், பொறாமை எல்லாம்தான் உன்னை இப்படி ஒரு கற்பனை சம்பவத்தைச் சொல்ல வைத்திருக்கிறது.

வேறு யாரைப் பற்றி நீ சொல்லியிருந்தாலும் ஒருவேளை நாங்கள் நம்பியிருக்கக்கூடும். ஆனால், இந்த உத்தமர் மீது நீ சுமத்துவது அபாண்டம், வீண்பழி…’’ என்று ஏகோபித்துச் சொன்னார்கள். அந்தப் பெண் திகைத்து நின்றாள்.எத்தனையோ நற்குணங்கள் உள்ள ஒருவர் ஒரே ஒரு சம்பவத்தால் அப்படியே பாதாளத்துக்குள் போய்விடுவதுதானே வழக்கம்! இவருடைய விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறதே! அதிலும் ஒரு பெண் பொய்யுரைத்தாலும் அவளுக்கே ஆதரவாக நின்று அவள் புகாரளித்த நபரை வசைபாடுவதும், அவரைத் தண்டிக்க முயற்சிப்பதும்தானே உலக வழக்கம்! ஆனால், இங்கே எல்லாம் மாறாக, தன் தூண்டுதலால் தன்னிடம் அவர் மோசமாக நடந்துகொண்டதை யாரும் நம்ப மறுக்கிறார்களே! அதுதான் ஞானத்தின் வெற்றி.

எதனுடனும் சம்பந்தப்படாத, தான் விரும்பாத, பற்று கொள்ளவே முடியாத அந்தச் சூழலில், தன்னைப் பற்றி பிறரும், அவளும் கொண்டிருக்கக்கூடிய அபிப்ராயத்தை பரஸ்பரம் அறியச் செய்ய அவர் மேற்கொண்ட செயல் அது. வெறும் புலன்களால் செயல்பட்டாலும் அதுதான் ஆன்மா தனித்து ஒழுக்கம் கண்ட உயர்நிலை!

(கீதை இசைக்கும்)

தொகுப்பு: பிரபு சங்கர்

The post ஆன்ம ஒழுக்கம் என்பது எது? appeared first on Dinakaran.

Tags : Yudhishtra ,
× RELATED சிற்பமும் சிறப்பும்