×

திண்டுக்கல் என்ஜிஓ- சிடிஓ காலனி இடையே இணைப்பு பால கட்டுமான பணி இழுபறி: 1 கிமீ சுற்றி செல்லும் நிலை உள்ளதாக மக்கள் புகார்

திண்டுக்கல், ஏப். 18: திண்டுக்கல் என்ஜிஓ காலனி, சிடிஓ காலனி இடையே இணைப்பு பால கட்டுமான பணிகள் துவங்காமல் இருப்பதால் வாகனங்களில் 1 கிமீ சுற்றி நிலை உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் உழவர் சந்தை அருகே என்ஜிஓ காலனி, சிடிஓ காலனி அடுத்தடுத்து உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரு காலனி பகுதிக்கு நடுவே பாலகிருஷ்ணாபுரம் பெரிய கண்மாய் தண்ணீர் நிரம்பி ஓடையூர், என்ஜிஓ காலனி வழியாக ராஜா குளம் செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலின் குறுக்கே வாகனங்கள் சென்று வர இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டது. பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட இப்பகுதியில் புதிய பாலம் கட்டுமான பணி எதுவும் நடைபெறவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வாய்க்காலில் ஒரு நபர் செல்லும் வகையில் குறுக்கே பட்டியகல் கொண்டு தற்காலிக நடைபாதை ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உழவர் சந்தை என்ஜிஓ காலனியில் இருந்து சிடிஓ காலனிக்கு செல்ல வாகனங்கள் ஓடையூர் வழியாக சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால் அவசர காலங்களில் மருத்துவமனைக்கு சென்று வர மிகவும் சிரமப்படுவதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து குப்பைகள் வாய்க்காலில் கொட்டி விடுகின்றனர். இதனால் நீர்வரத்து வாய்க்கால் தூர்ந்து போய் குப்பை மேடாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரத்து வாய்க்காலை தூர்வாரி பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திண்டுக்கல் என்ஜிஓ- சிடிஓ காலனி இடையே இணைப்பு பால கட்டுமான பணி இழுபறி: 1 கிமீ சுற்றி செல்லும் நிலை உள்ளதாக மக்கள் புகார் appeared first on Dinakaran.

Tags : Dindigul NGO-CTO Colony ,Dindigul ,Dindigul NGO Colony ,CDO Colony ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...