×

யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில்சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்வனம், மின்வாரியம் இணைந்து அதிரடி நடவடிக்கை

மேட்டுப்பாளையம், ஏப். 18: மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பை தடுக்க சட்டவிரோத மின் வேலி அமைத்திருப்பது தெரியவந்தால் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்றும் வனம் மற்றும் மின்வாரியம் இணைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 600 யானைகள் மின்வேலிகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா முதலிடத்திலும், ஓடிசா மற்றும் அசாம் மாநிலங்களில் மின்வேலிகளால் உயிரிழக்கும் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக தமிழகத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தாலும், குறைந்தபட்சம் ஆண்டுக்கு 2 யானைகளாவது உயிரிழப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வட்டார அளவில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை என மூன்று வனச்சரங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, மான் ,காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

குறிப்பாக கோவையில் கடந்த மூன்று தினங்களாக கோடை வெப்பத்தின் அளவு 100 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகி வருகிறது. இதில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் உணவு மற்றும் குடிநீருக்காக வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அவ்வப்போது ஊருக்குள் நுழைந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இதனால் பல இடங்களில் மனித – வனவிலங்கு மோதல்கள் உருவாகின்றன. இதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகள் தங்களது விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்கும் வகையில் விவசாயிகள் மின்சார வேலிகளை அமைத்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருந்தாலும் சில விவசாயிகள் சட்டத்திற்கு புறம்பாக பயிர்களை வனவிலங்குகளிடமிருந்து காப்பாற்ற வீடு, விவசாயம் மற்றும் இதர மின் இணைப்புகளில் இருந்து நேரடி மின்சாரத்தை வேலிகளில் பாய்ச்சி வருகின்றனர். இந்த சட்ட விரோத மின்வேலிகளால் பல இடங்களில் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சிக்கி பரிதாபமாக பலியாகி வருகின்றன. இதனை தடுக்கும் வகையில் அண்மையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில் பாலாஜி தமிழ்நாடு மின்வாரியத்துடன், வனத்துறையினரும் இணைந்து உரிய ரோந்து பணியினை மேற்கொண்டு யானை உயிரிழப்பை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன் ஒருபகுதியாக தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கோவை வடக்கு சார்பில் துண்டு பிரசுரங்கள் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். இந்த துண்டு பிரசுரத்தில் “ பயிர்களை விலங்குகளிடமிருந்து காப்பாற்ற வீடு, விவசாயம் மற்றும் இதர மின் இணைப்புகளில் இருந்து மின்சார வேலி அமைப்பது இந்திய மின்சார சட்டம் 2003 பிரிவு 138ன் படி குற்றமாகும். தடையை மீறி மின்சார வேலி அமைப்போர் மீது குற்றவியல் சட்டத்தின் படி தண்டனையும் வழங்கப்படும். மின்சார வேலி அமைப்பதால் மனித மற்றும் விலங்குகளுக்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் எனவும், எவரேனும் சட்டத்திற்கு புறம்பாக மின்சார வேலி அமைத்து இருப்பது தெரிய வந்தால் தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கூறி அச்சிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘விளைநிலங்களை பாதுகாக்க விவசாயிகள் பேட்டரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் 1000 வோல்ட் – 10 ஆயிரம் வோல்ட் மின்சாரம் மட்டுமே வரும். இதனால் வனவிலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அதனை விடுத்து வீடுகள், விவசாயம் மற்றும் இதர மின் இணைப்புகளில் இருந்து நேரடி மின்சாரம் மின்வேலிகளில் பாய்ச்சப்பட்டால் 230 வோல்ட் மின்சாரம் நேரடியாக வரும். இதனால் மனிதர்களுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நேரடி மின்சாரத்தை வேலிகளில் பயன்படுத்தினால் அது சட்டப்படி குற்றம். அது குறித்து தகவல் தெரிய வந்தால் நிரந்தரமாக மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் தாழ்வான மின்கம்பத்தில் அடிபட்டு யானை பலியானதை தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு யானைகளின் வலசைப்பாதைகளில் அதாவது வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள 8 மீட்டர் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு தற்போது 9 மீட்டர் மின்கம்பங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.

வனத்துறையின் ஆலோசனையின் படி வனப்பகுதியை தொட்டவாறு எங்கெல்லாம் மின்கம்பங்கள் தாழ்வாக செல்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும், அந்த ஆய்வின் படி தற்போது மின் கம்பங்கள் மாற்றப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் மாற்றித்தர தயாராக உள்ளதாகவும் மின்வாரிய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். மேட்டுப்பாளையம் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் கூறுகையில், ‘ வனப்பகுதியில் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் வனவிலங்குகள் ஊருக்குள் வராத வண்ணம் தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், வனத்துறையும், மின்வாரியமும் இணைந்து வனப்பகுதியை ஒட்டியுள்ள மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போடப்பட்டுள்ள மின்சார வேலிகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தடையை மீறி சட்டவிரோத மின்வேலி அமைத்திருப்பது தகவல் தெரிய வந்தால் அதுகுறித்து மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்து வருவதாகவும் கூறினார். வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் தாழ்வாக உள்ள மின்கம்பங்கள் குறித்து மின்வாரியத்திடம் தெரிவித்து, அதனை மாற்றும் வகையில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த வகையில் தாழ்வான மின்கம்பங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில்
சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்
வனம், மின்வாரியம் இணைந்து அதிரடி நடவடிக்கை
appeared first on Dinakaran.

Tags : Mettupalayam ,
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது