×

கோபி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்க காதல் தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு: ஊராட்சி தலைவர் மீது ஆர்டிஓவிடம் புகார்

கோபி: கோபி அருகே காதல் திருமணம் செய்த 30 குடும்பத்தினரை கோயில் திருவிழாவில் பங்கேற்க விடாமல் ஊராட்சி தலைவர் ஒதுக்கி வைப்பதாக கூறி கிராம மக்கள் கோபி ஆர்டிஓவிடம் புகார் அளித்தனர். கோபி அருகே அக்கரை கொடிவேரி ஊராட்சியில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களில் 30 இளைஞர்கள் காதல் கலப்பு திருமணம் செய்துள்ளனர். இங்கு சீதாள பரமேஷ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஏப்ரலில் நடைபெறுவது வழக்கம். திருவிழாவிற்கு 150 குடும்பத்தினரிடமும் வரி வசூலிக்கப்படுவது வழக்கம். கோயில் நிர்வாகியாக அக்கரை கொடிவேரி ஊராட்சி மன்ற தலைவராக உள்ள சிவக்குமார் பொறுப்பேற்ற உடன் காதல், கலப்பு திருமணம் செய்தவர்களிடம் திருவிழா வரி வசூலிக்க கூடாது என கட்டுப்பாடு விதித்து உள்ளார்.

இதனால், கடந்த ஆண்டு திருவிழா நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட 30 குடும்பத்தை சேர்ந்தவர்களும் கோபி தாலுகா அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து அனைவரையும் ஒருங்கிணைத்து திருவிழா நடத்த தாசில்தார் ஆசியா உத்தரவிட்டார். ஆனால் அதன் பின்னரும், ஊராட்சி தலைவர் திருவிழாவை நடத்தாமல் நிறுத்தி வைத்ததோடு, கோயில் சாவியையும் பூசாரியிடம் இருந்து வாங்கி சென்றுள்ளார். அதே போன்று கோயில் பூஜை செய்யும் முத்துசாமியின் மகன் கலப்பு திருமணம் செய்ததால், அவரை பூஜை செய்ய கூடாது என ஊராட்சி தலைவர் சிவக்குமார் கூறி உள்ளார். அதிர்ச்சியடைந்த 30 குடும்பத்தினரும் நேற்று கோபி ஆர்டிஓ திவ்யபிரியதர்ஷினி மற்றும் கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து கோபி டிஎஸ்பியை விசாரணை நடத்த உத்தரவிடுவதாகவும், கோயில் திருவிழா நடத்த தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

The post கோபி அருகே கோயில் திருவிழாவில் பங்கேற்க காதல் தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு: ஊராட்சி தலைவர் மீது ஆர்டிஓவிடம் புகார் appeared first on Dinakaran.

Tags : Gobi ,RTO ,Panchayat ,Dinakaran ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது