×

கட்டணமில்லா பேருந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை கிடைக்கிறது மகளிருக்கான ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி: திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ பாராட்டு

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறைகள் ஆகிய மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருவள்ளூர் வி.ஜி.ராஜேந்திரன் (திமுக) பேசியதாவது: மாற்றுத்திறனாளிகளும் கடற்கரை அழகை ரசிக்க வேண்டும் என்பதற்காக சென்னை, மெரினா கடற்கரையில் அவர்களுக்காக தனி பாதை அமைத்து கொடுத்தவர் நமது முதல்வர். மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்க வேண்டும் என்பதற்காக அந்த துறையை மறைந்த முதல்வர் கலைஞர் தன்னிடமே வைத்துக் கொண்டார். முதல்வரும் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் சென்னை லிட்டில்பிளவர் கான்வென்ட் பள்ளிக்கு சென்று, தனது பிறந்தநாளை அந்த பள்ளி மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்.

ஒருவர் முன்னேற்றத்துக்கு பெண்கள்தான் காரணமாக இருப்பார்கள். அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது மனைவி உறுதுணையாக இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் கூட ஒரு பேட்டியில், எனது முன்னேற்றத்துக்கு எனது மனைவிதான் காரணம் என்றார். அந்தளவுக்கு மனைவி என்றால் பயம் மற்றும் மரியாதை அவருக்கு உண்டு. தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்துக்காக கட்டணமில்லா பேருந்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ரோஸ் கலர் பேருந்து வருகிறது என்றாலே, ஸ்டாலின் பஸ் வருது என்று பெண்கள் சொல்கிறார்கள். கட்டணமில்லா பேருந்து மூலம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை கிடைக்கிறது.

இது மட்டுமில்லாமல், வருகிற செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் போடப்படும். மகளிருக்கான ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர் கல்வி படித்தால் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தால் உயர் கல்வி படிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. திருநங்கைகளுக்கு கலைஞர் எந்தளவுக்கு மரியாதை அளித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். 2008ம் ஆண்டுதான் திருநங்கை நலவாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கும் அரசு பேருந்தில் கட்டணம் இல்லை. 40 வயதுக்கு மேல் உள்ள திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

1 முதல் 5 வயது சிறார்களுக்கு அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் இந்த அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் அடைகிறார்கள். நமது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிகளுக்கே சென்று அந்த மாணவர்களுடன் உணவருந்தி ஊக்கத்தை அளித்து வருகிறார். இதுபோன்று மாணவ – மாணவிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளதால் முதல்வரை வாழ்த்தி, “நூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க” என்று அவர்கள் பாடுகிறார்கள் என்று வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இந்த பாடலை ராகத்தோடு சட்டப்பேரவையில் பாடிக்காட்டினார்.

The post கட்டணமில்லா பேருந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை கிடைக்கிறது மகளிருக்கான ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி: திருவள்ளூர் தொகுதி திமுக எம்எல்ஏ பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Dravida ,DMK ,MLA ,Tiruvallur Constituency ,CHENNAI ,Tiruvallur ,VG Rajendran ,
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...