×

ராமநாதபுரம் பாஜவில் மோதல் உச்சக்கட்டம் மாவட்ட தலைவரை கொலை செய்ய கூலிப்படை அனுப்பிய மாஜி நிர்வாகி: ஆர்எஸ்எஸ் பேரணியில் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது அம்பலம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட பாஜ தலைவர் வீட்டில் அரிவாளுடன் நுழைந்த சென்னை கூலிப்படையினர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆர்எஸ்எஸ் பேரணியில் வைத்து கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் மாவட்ட தலைவர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், கேணிக்கரையிலுள்ள பாஜ மாவட்ட தலைவர் தரணி முருகேசன் வீட்டிற்கு நேற்று முன்தினம் இரவு, முகமூடி அணிந்த 2 பேர் ஆயுதங்களுடன் நுழைய முயன்றனர். இவர்களை தடுத்த தொழிலாளி கணேசனுக்கு காலில் வெட்டு விழுந்தது. பாஜ நிர்வாகிகள் அந்த நபர்களை பிடித்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பிடிபட்டவர்கள் சென்னை எண்ணூரை சேர்ந்த மோகன்(34), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கப்பலேஷ் (எ) சுரேஷ்(35) என்பது தெரிய வந்தது. புகாரின்படி கேணிக்கரை போலீசார், சென்னையை சேர்ந்த மோகன், சுரேஷ், ராமநாதபுரத்தை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ்வரன், சூரன்கோட்டை வக்கீல் சண்முகநாதன், முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன், ராமநாதபுரம் சேட்டை பாலா (எ) பாலமுருகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மோகன், சுரேஷ், சேட்டை பாலா ஆகியோரை கைது செய்தனர்.

கைதான மோகன், சுரேஷ், சேட்டை பாலா மீது சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொலை உள்ளிட்ட 20 வழக்குகள் உள்ளன. கூலிப்படையான இவர்கள் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில் வைத்து தரணி முருகேசனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதிகமான போலீஸ் இருந்ததால் வீட்டிற்கு வந்தவுடன் கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். பாஜ மாவட்ட தலைவர் பிரச்னை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சிக்கும் அளவுக்கு சென்றுள்ளது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • தலைவர் பதவிக்கு பஞ்சாயத்து தலைமை நடவடிக்கை எடுக்கும்
    இதுகுறித்து கருப்பு முருகானந்தம் கூறும்போது, ‘‘முன்னாள் பாஜ மாவட்ட தலைவராக இருந்த கதிரவனின் பதவி பறிக்கப்பட்டதால், அவரின் ஆதரவாளர்கள் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். கருத்து வேறுபாடு எல்லா கட்சியிலும் இருக்கும். ஆனால் கூலிப்படையை ஏவி கொல்ல முயன்ற சம்பவம் பாஜவில் இல்லை. தற்போது நடந்துள்ளது. தொடர்புடைய பாஜவினர் மீது கட்சி தலைமை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.
  • கொலை முயற்சி வரை சென்ற பதவி வெறி
    ராமநாதபுரம் மாவட்ட பாஜ தலைவராக கதிரவன் இருந்தபோது அவரது தரப்பும், முன்னாள் மாவட்ட தலைவர் முரளீதரன் தரப்பும் எதிரெதிர் கோஷ்டிகளாக செயல்பட்டு வந்து. கடந்த மாதம் கட்சி பதவிக்கு பணம் பேரம் பேசும் ஆடியோ விவகாரத்தால் கதிரவன் மாற்றப்பட்டார். இதையடுத்து முரளீதரனின் தீவிர ஆதரவாளரும், மாவட்ட பொருளாளராகவும் இருந்த தரணி முருகேசன் கடந்த மார்ச் 27ம் தேதி புதிய மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து ஏப்.9ம் தேதி மாவட்ட பார்வையாளராக முரளீதரன் நியமிக்கப்பட்டார். இதனால் கதிவரன் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 12ம் தேதி ராமநாதபுரம் தனியார் மண்டபத்தில் நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பொன்.கணபதி, மதுரை மண்டல பொறுப்பாளர் சுப.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கதிரவனின் பெயரை குறிப்பிடவில்லை எனக்கூறி, கதிரவனின் ஆதரவாளரான சேட்டை பாலா தரப்பினருக்கும், கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு சேர்கள் தூக்கி வீசப்பட்டு ரகளை நடந்தது குறிப்பிடத்தக்கது.

The post ராமநாதபுரம் பாஜவில் மோதல் உச்சக்கட்டம் மாவட்ட தலைவரை கொலை செய்ய கூலிப்படை அனுப்பிய மாஜி நிர்வாகி: ஆர்எஸ்எஸ் பேரணியில் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,BJP ,mercenaries ,Ambalam ,RSS rally ,Chennai ,RSS ,rally ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே...