×

உறவினர்கள் பறித்த சொத்தை மீட்டுத்தர கோரி தலைமை செயலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி

சோழிங்கநல்லூர்: தனது சொத்துக்களை உறவினர்கள் பறித்துவிட்டதாக மூதாட்டி ஒருவர் நேற்று தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் நடந்து வருகிறது. இதனால், வழக்கம்போல் நேற்று தலைமை செயலகம் பரபரப்பாக காணப்பட்டது. மேலும், தலைமை செயலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூதாட்டி ஒருவர் கையில் பையுடன் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்தார். அவர், வரிசையில் நின்று தலைமை செயலகத்திற்குள் செல்ல முயன்றார். வழக்கம்போல், போலீசார் தலைமை செயலகத்திற்கு செல்லும் பொதுமக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

அப்போது போலீசார், மூதாட்டி வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் ஒரு பாட்டிலில் மண்ணெண்ணெய் இருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை வெளியே செல்லுமாறு கூறினர். அப்போது யாரும் எதிர்பார்க்காத நிலையில் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் மூதாட்டி மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர். பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மூதாட்டியை வடக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு போலீசார் விசாரணை நடத்திய போது, திருவண்ணாமலையை சேர்ந்த தனலட்சுமி (65) என்றும், இவரது சொத்தை உறவினர்கள் அபகரித்து கொண்டுதாகவும், அதுகுறித்து திருவண்ணாமலையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்க வந்ததும் தெரியவந்தது. அதைதொடர்ந்து மூதாட்டி தனலட்சுமியிடம் புகார் மனுவை போலீசார் பெற்று கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைமை செயலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post உறவினர்கள் பறித்த சொத்தை மீட்டுத்தர கோரி தலைமை செயலகம் முன்பு மூதாட்டி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Chief Secretariat ,Sozhinganallur ,Dinakaran ,
× RELATED விதிகளை மீறி பத்திரிகைகளில் பாஜ...