×

இலங்கை 6 விக்கெட்டுக்கு 591 ரன் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் அயர்லாந்து திணறல்: 5 விக்கெட் வீழ்த்தினார் பிரபாத்

காலே: அயர்லாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், அயர்லாந்து முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து திணறி வருகிறது.காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன் எடுத்திருந்தது. கேப்டன் திமத் கருணரத்னே 179 ரன் (235 பந்து, 15 பவுண்டரி), குசால் மெண்டிஸ் 140 ரன் (193 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினர்.

தினேஷ் சண்டிமால் 18, பிரபாத் ஜெயசூரியா 12 ரன்னுடன் நேற்று 2வது நாள் ஆட்டத்தை தொடங்கினர். பிரபாத் 16 ரன், தனஞ்ஜெயா டி சில்வா 12 ரன்னில் வெளியேற… சண்டிமால் – சதீரா சமரவிக்ரமா இணைந்து அபாரமாக ரன் குவித்தனர். இவர்களை பிரிக்க அயர்லாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இருவரும் சதத்தை நிறைவு செய்ய, இலங்கை அணி 131 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 591 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.

சண்டிமால் 102 ரன் (155 பந்து, 12 பவுண்டரி), சமரவிக்ரமா 104 ரன்னுடன் (114 பந்து, 11 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அயர்லாந்து பந்துவீச்சில் கர்டிஸ் கேம்பர் 2, மார்க் அடேர், ஆண்டி மெக்பிரைன், பென் ஒயிட், ஜார்ஜ் டாக்ரெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி, 2ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ரன் எடுத்து திணறி வருகிறது.ஜேம்ஸ் மெக்கல்லம் 35 ரன், ஹாரி டெக்டர் 34, பீட்டர் மூர் 14 ரன், டாக்ரெல் 2 ரன் எடுத்து ஆட்டமிழக்க, மர்ரே காமின்ஸ், கர்டிஸ் கேம்பர் டக் அவுட்டாகினர். இலங்கை பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரியா 19 ஓவரில் 9 மெய்டன் உள்பட 42 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். விஷ்வா பெர்னாண்டோ 2 விக்கெட் வீழ்த்தினார். லோர்கன் டக்கர் 21, அண்டி மெக்பிரைன் 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் இருக்க, அயர்லாந்து இன்னும் 474 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3ம் நாள் சவாலை சந்திக்கிறது.

The post இலங்கை 6 விக்கெட்டுக்கு 591 ரன் குவித்து டிக்ளேர்: முதல் இன்னிங்சில் அயர்லாந்து திணறல்: 5 விக்கெட் வீழ்த்தினார் பிரபாத் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Ireland ,Prabhat ,Galle ,Dinakaran ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்