×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி வலியுறுத்தல்

தாம்பரம்: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி (திமுக) பேசுகையில், ‘பல்லாவரம் தொகுதிக்கு உட்பட்ட குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு ஆவன செய்ய வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘முதல்வரிடத்தில் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வைத்த கோரிக்கையினை ஏற்று, கடந்த ஆண்டு பட்ெஜட்டில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திட வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த வகையில், 400 படுக்கைகளுடன், 2 லட்சத்து 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டிடம் ரூ.100 கோடியில் கட்டும் பணியை முதல்வர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி தொடங்கி வைத்திருக்கிறார்.

இந்த கட்டிட பணிகள் முடிவடைந்தவுடன், சட்டமன்ற உறுப்பினர் கோரியிருப்பதை போல அனைத்து சிறப்பு வசதிகளுடனும் கூடிய ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக அது இயங்க இருக்கிறது. இ.கருணாநிதி: 1972ம் ஆண்டு கலைஞரால் தொடங்கப்பட்டது அந்த மருத்துவமனை. 52 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய மருத்துவமனைப் பணியை தொடங்கி வைத்திருக்கிறார். தற்போது, மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் 4 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கு சிரமப்படுவார்கள். தற்போது, இப்பிரச்னைக்கு தீர்வாக, ரூ.100 கோடியில் புதிய கட்டிட திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்திருக்கிறார். ஆகவே, தொகுதி மக்களின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏற்கனவே மருத்துவமனை கட்டிடம் 4 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. அந்த இடத்தில் புதிய மருத்துவமனை உருவாக்க அரசு முன்வருமா?. அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பக்கத்தில் இருக்கிற ஒரு மிகப்பெரிய மைதானத்தில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடக்கிறது. ஏற்கனவே இருக்கிற அந்த மருத்துவமனையிலும்கூட, தற்போது கூடுதல் வசதிகளாக ரூ.6.89 கோடியில் தாய்-சேய் நலக்கட்டிடம் ஒன்றும், ரூ.154 கோடியில் ஆய்வக சேவை கட்டிடமும் கட்டும் பணி நடந்து வருகிறது. எனவே, உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, நிச்சயம் அந்த மருத்துவமனை அனைத்து வசதிகளுடனும் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மிக விரைவில் இயங்க இருக்கிறது.

இ.கருணாநிதி: அனகாபுத்தார் பகுதி நகராட்சியாக இருந்தது. அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் 1961ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது திறக்கப்பட்டது. அங்கு பிரசவத்திற்கு 3 படுக்கை வசதிகள் கொண்ட அறைகள் உள்ளன. அது போதுமானதாக இல்லை. அந்தக் கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கு ரூ.1.20 கோடியில் கருத்துரு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருநீர்மலை பகுதியில் புறநோயாளிகளெல்லாம் வருவதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட ரூ.1.20 கோடியில் கருத்துரு தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே, அனகாபுத்தூர் மற்றும் திருநீர்மலை பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் உயர்த்தப்படுமா?. அமைச்சர் மா.சுப்பிரமணியன்: பல்லாவரம் தொகுதி தாம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ.1.25 கோடியில் மாவட்ட ஒருங்கிணைந்த ஆய்வகம், மாவட்ட ஒருங்கிணைந்த ஆய்வகம், ரூ.3.20 கோடியில் ஜமீன் பல்லாவரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் என 10 மருத்துவ கட்டிடம் ரூ.11.12 கோடியில் தொகுதியில் பணிகள் நடந்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

The post குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை பன்னோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்: பேரவையில் இ.கருணாநிதி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Krompet Government Hospital ,Pannoku Hospital ,E. ,Karunaniti ,TAMPARAM ,Pallavaram MLA ,EA Karunanidhi ,Dizhaga ,Government Hospital of Chrompet ,Pallavaram ,E. Karunanidi ,
× RELATED 6 சட்டமன்ற தொகுதியிலும் எம்பி அலுவலகம்...