×

இனி வரும் காலங்களில் நில எடுப்பு பணி 90% முடிந்தால் தான் பணிகளுக்கு டெண்டர் விடப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் போளூர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக), பேசுகையில் “போளூர் தொகுதியில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இதற்கு பதில் அளித்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: போளூர் சட்டமன்ற தொகுதியில் நடந்து வரும் கடலூர்-சித்தூர் சாலையில் ரயில்வே பாதைக்கு பதிலாக புதியதாக போளூர்-ஆரணி ரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணிக்கு நில எடுப்புக்காக 2013ம் ஆண்டு ரூ.523.44 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்டுமான பணிக்கு 2018ல் ரூ.27.87 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

நில எடுப்பு பணியில் திருத்திய நிர்வாக ஒப்புதலுக்காக ரூ.7.585 கோடியில் அங்கீகாரம் பெறும் பொருட்டு பரிசீலனையில் உள்ளது. நில எடுப்பு பணி இறுதி கட்ட நிலையில் இருக்கிறது. எனவே ரயில்வே பகுதிக்கு ஒப்பந்தம் கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரயில்வே பகுதியில் கட்டுமான பணி மற்றும் நெடுஞ்சாலை பணிகள் விரைவில் முடியும். பணிகள் தாமதத்திற்கு நில எடுப்பு தான் காரணம். எந்தவொரு பணிக்கும் நில எடுப்பு என்பது மிக முக்கியமானது. இனி வரும் காலத்தில் 90 சதவீத நில எடுப்பு பணி முடிந்தால் தான் டெண்டர் விடப்படும். உறுப்பினர் திருவண்ணாமலை ரயில்வே பாலம் அருகில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். அதற்கு அவசியமில்லை. அந்த பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைய இருக்கிறது. ஏட்டிவாடி பகுதியில் நிலம் எடுக்கும் பணி முடிந்ததும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இனி வரும் காலங்களில் நில எடுப்பு பணி 90% முடிந்தால் தான் பணிகளுக்கு டெண்டர் விடப்படும்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Minister A. Etb. Velu ,Polur Agri Krishnamurthi ,Adhanakha ,Bollur ,
× RELATED சிங்கப்பூர் துறைமுகத்தில் சரக்குப்...