×

தாமரை கட்சிக்கு புதிய தலைவர் கனவில் உள்ளவர் இலை கட்சியின் விஐபியை சந்தித்து பேசியதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரையின் தற்போதையை தலைவரை நீக்க, புதுசாக ஒரு தலைவர் முளைத்திருக்கிறாராமே, அப்படியா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சி தலைவரின் நடவடிக்கை தேசிய தலைமைக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். கட்சியில் தன்னை மட்டுமே முன்னிறுத்தியும், முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தாமரையில் உறுப்பினர் உள்பட பல்வேறு ஒன்றிய, நகர, மாவட்ட தலைவர் பதவிகளை வகித்தவர்களையும், கட்சி வளர்ச்சிக்கு தன்னை ஒப்படைத்தவர்களை முழுவதுமாக ஓரங்கட்டினார் ‘மவுன்டன்’ பெயரை கொண்டவர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களில் மாஜி சிரிப்பு நடிகரும் ஒருவராம். விமான எமர்ஜென்சி கதவை திறப்பது போல நக்கல் செஞ்சி அவரு படத்தை வெளியிட்டிருக்காராம். இவர் மாநில தலைவராக இருந்தால் தேர்தலில் தனித்துவிடப்படுவோமுன்னு நிர்வாகிகள் எல்லாம் மேலிடத்துல சொல்லியிருக்காங்க. இதனால ஷாக்கான தலைமை, ‘மவுன்டன்’ தலைவரை தூக்கிடுவோமுன்று உறுதி சொல்லியிருக்காங்களாம்.

இதனை தெரிஞ்சிக்கிட்ட தலைவர் ‘மவுன்டன்’, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் வகையில் அதிரடியான நடவடிக்கையில ஈடுபட்டிருக்காராம். அதுல ஒண்ணுதான் அதிமுக சொத்துப்பட்டியலை வெளியிடுவோம்னு சொன்னதாம். இவ்வாறு வெளியிட்டு, மீண்டும் மாநில தலைவரா உட்கார்ந்துடலாமுனு எண்ணமாம். அதுல தனக்கு சாப்பாடு போடுவதே எனது பிரண்ட்ஸ்சுகள்ன்னு சொல்லி உலகமே நண்பர்களை தேடும் அளவுக்கு சிரிக்க வைச்சாராம். இதற்கிடையில பாஜவின் முக்கிய நிர்வாகிகள் மூலமா இலைக்கட்சியின் சேலத்து மாஜிகிட்ட தூது அனுப்பிய தகவலும் கசிஞ்சிருக்கு. சமீபத்துல மாங்கனி நகருக்கு வந்த அந்த தாமரை நிர்வாகி, முக்கால் மணி நேரம் மாஜிகிட்ட பேசியிருக்காரு. அப்போ, எதைப்பற்றியும் கவலைப்படவேண்டாமுன்னு சொல்லிட்டுபோனாராம். இந்த தகவலை தெரிவிச்சுட்டு போனவருதான் அடுத்த தலைவருன்னு இலை, தாமரையில ஒரே பேச்சா இருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலம்காரருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, தேனிக்காரர் பிரமாண்ட மாநாடு நடத்த ஐடியா கொடுத்தது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தேனிக்காரரின் அணி சார்பில் தமிழகத்தின் மைய பகுதியான மலைக்கோட்டை மாநகரில் மாத இறுதியில் பிரமாண்டமான அளவில் மாநாடு நடக்குதாம். இந்த மாநாட்டுக்கு பெரிய அளவில் கூட்டத்தை காண்பித்து சேலம்காரரை மிரள வைக்க வேண்டும் என்று ஒரு பெரிய டீமை இறக்கி உள்ளாராம் தேனிக்காரர். இதற்காக, தேனிக்காரரின் டீம் 24 மணி நேரமும் களத்தில் இறங்கி உள்ளதாம். இதற்காக டெல்டா மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களிலும் இருந்தும் தொண்டர்களை அழைத்து வரும் பொறுப்புகளை அந்தந்த மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைச்சு இருக்காராம். மலைக்கோட்டை, நெற்களஞ்சியம், மனுநீதிசோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதில் இருந்தும் தேனிகாரர் அணியை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் குக்கர் கட்சியில் உள்ள நிர்வாகிகள், 2வது கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சின்னமம்மி ஆதரவாளர்கள் என ஒருவர் கூட மிஸ் ஆகாமல் மலைக்கோட்டை மாநாட்டிற்கு அழைத்து வரும் வேலை கட்சிதமாக நடக்குதாம். அதை ைவத்தியரானவர் மேற்பார்வையில் நடந்து முடிந்துள்ளதாம்.

சேலத்துக்காரருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், இந்த மாநாட்ைட பிரமாண்டமாக நடத்த வேண்டும். இதற்காக ‘வைட்டமின் ப’ உள்ளிட்ட என்னென்ன உதவிகளும் செய்ய தயாராக இருப்பதாகவும் குக்கர் தலைமையும், சின்னமம்மியும் தேனிக்காரருக்கு சிக்னல் அளித்துள்ளார்களாம். இதை கேள்விப்பட்ட சேலத்துகாரர் டீம் பணத்துக்கும் பழசரத்துக்கும் பலர் போவாங்க… நம்ம வேலையே நம்ம ஆட்கள் போகாமல் தடுப்பதுதான் என்று சொல்லி இருக்கிறார்களாம். இதனால, குக்கர், தேனிக்காரர் அணியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிரியாணியில என்ன மாமூல் பார்த்துவிட முடியும்..’’ என்று கேட்டார் மாமா.
‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த நகரான பிரியாணி நகரில், தொழிலாளர் நல அலுவலகத்தில் முழு முதற் கடவுள் பெயர் கொண்ட ஆபிசர் இருக்காரு. பல கடைகளில் குழந்தை தொழிலாளர் குறித்த கம்ப்ளெய்ன்ட் வந்தா ஆபிசர் அங்கு உடனடியாக சோதனைக்கு போயிடுறாராம். பின்னர், அந்த கடைக்காரர் கேஸ், பைன் என்பதை எல்லாம் காரணம் காட்டி பல்க் அமவுண்ட்டை செட்டில் செய்ய கேக்குறாராம்.

அவர்களோ இப்படி மாட்டிக்கிட்டோமே என்று புலம்பியவாறு அவர் கேட்கும் ‘ப’ வைட்டமினை கொடுத்துடறாங்களாம். அவர் காட்டில் இப்போ நல்ல மழையாம். இதனால் இந்த ஊரில் நமக்கு நல்ல பிசினஸ் இருக்குன்னு நினைத்த அந்த அதிகாரிக்கு அங்கு ஆபிசில் இருக்கும் எடுபிடிகள் அளித்த தகவலால் ரேஷன் கடை பக்கம் தங்களது சோதனையை மாற்றி உள்ளார்களாம். உரிய வகையில் எடைச்சான்று பெற்ற நிலையில் மீண்டும் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என ரேஷன் கடைக்காரர்கள் கேள்வி எழுப்பியதுடன் தங்கள் மேலதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார்களாம். இப்படி மிஸ்டர் பத்தூர் மாவட்டம் பிரியாணி ஊர்ல பரபரப்பை இந்த அதிகாரி கூட்டி உள்ளாராம்… போலீசில் மாட்டினாலும் பரபரப்பு தான் என்கிறார்களாம் விஷயம் தெரிந்தவர்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புல்லட்சாமியை வெற்றியை கோஷ்டிபூசலை மறந்து தடுத்து இருக்கணும்னு யாரு பேசிக்கிறாங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கதர் கட்சி தலைவர் கைதை கண்டித்து கிராமப்புறத்தில் நடந்த சத்தியாகிரக போராட்டத்தில், கலந்து கொண்ட கதர் கட்சியின் முன்னாள் முதல்வர், புல்லட்சாமியை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆக்ரோஷத்தில் மோடியை விமர்சிப்பதற்கு பதிலாக டென்ஷன் ஆகி புல்லட்சாமியின் ஆட்சி அலங்கோலங்களை பட்டியலிடுகிறாராம்.

2011ம் ஆண்டு புல்லட்சாமிதான் முதல்வராக இருந்தார். அப்போதும் இதேபோன்று பட்ஜெட்டில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காவிட்டாலும், பல திட்டங்களை மனம்போன போக்கில் வெளியிட்டார். ஒற்றும், பாதியாக திட்டங்களை நிறைவேற்றிவிட்டு நான் அறிவித்ததை செய்துவிட்டேன் என்ற மனசு கூசாமல் பொய் பேசினாா. இதனை நம்பிய மக்கள் 2016ம் ஆண்டு அவருக்கு ஓட்டுபோட்டனர். இப்படி 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்தார். இப்போதும் அதே டெக்னிக்கை கையாள்கிறார். பட்ஜெட்டில் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல், அறிவிப்பு வெளியிடுகிறார். இதனை நிறைவேற்ற முடியாது என தெரியும். இருப்பினும் அதிகாரிகள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வார். இதே டெக்கினிக்கால் அடுத்த முறையும் அவர் ஆட்சியில் அமர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக மீண்டும் புல்லட்சாமி முதல்வராக இருப்பார் என பேசிக்கொண்டிருக்க.. அருகில் இருந்த தலைவர் ஒருவர், புல்லட்டை திட்டி பேசச் சொன்னா, பாராட்டி பேசுறீங்களே என்று என காதில் கிசுகிசுத்தார். உடனே சுதாகரித்துக்கொண்ட கதர்கட்சி தலைவர், ஆனால் அப்படியெல்லாம் நாங்கள் தொடர்ந்து ஆள்வதற்கு விட்டுவிடமாட்டோம். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… முதலில் புல்லட்சாமி ஆட்சியைத்தான் கலைப்போம் என திடீரென டிராக் மா்றி பேசினாராம்…’’ என்றார் விக்கியானந்தா

The post தாமரை கட்சிக்கு புதிய தலைவர் கனவில் உள்ளவர் இலை கட்சியின் விஐபியை சந்தித்து பேசியதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Lotus Party ,VIP ,Leaf Party ,wiki Yananda ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...