×

திருப்போரூரில் புதுப்பொலிவு பெறும் கந்தசாமி கோயில் தெப்பக்குள மதில் சுவர்

திருப்போரூர்: திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலை ஒட்டி பிரம்மாண்டமான தெப்பக்குளம் உள்ளது. சரவணப்பொய்கை எனப்படும் இந்த தெப்பக்குளம் 380 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் வற்றாமல் காட்சி அளிக்கிறது. இந்த குளம் மிகவும் ஆழமாக இருப்பதால் இந்த குளத்தில் வந்து குளிக்கும் பக்தர்கள் தவறி விழுந்து இறப்பது அதிகரித்ததால் கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது குளத்தைச் சுற்றிலும் ஸ்டீல் உருளைகளால் ஆன பாதுகாப்பு தடுப்பு வேலி அமைக்கப்பட்டது. இதன் மூலம் குளத்தில் விழுந்து இறப்பது முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி ஏற்பட்டதும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பி.கே.சேகர்பாபு கோயிலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, சுமார் ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு 5 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த திருமண மண்டபம், ஓய்வுக்கூடம், தங்கும் விடுதி ஆகியவற்றில் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அவற்றை கடந்த 6 மாதத்திற்கு முன்பு திறந்து வைத்தார். பின்னர், தெப்பக்குளத்தை ஆய்வு செய்த அவர் குளத்தைச் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள மதில்சுவர் சாதாரண நிலையில் உள்ளதாகவும் அவற்றை கோயில் கோபுரங்கள் வடிவில் கலை நயத்துடன் அமைக்க உத்தரவிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கினார். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக புதிய மதில்சுவரை கலை நயத்துடன் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.பணிகள் முடிவடைந்ததால் அவற்றிற்கு வண்ணம் பூசூம் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், புதிய மதிற்சுவர் திறந்து வைக்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post திருப்போரூரில் புதுப்பொலிவு பெறும் கந்தசாமி கோயில் தெப்பக்குள மதில் சுவர் appeared first on Dinakaran.

Tags : Kandhasamy temple ,Theppakulam ,Tirupporur ,Kandasamy Temple ,Saravanappoikai ,
× RELATED மதுரையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின!