×

கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது?

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ரயில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஷாருக் செய்பி மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கடந்த 2ம் தேதி கண்ணூருக்கு எக்சிகியூட்டிவ் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் உயிருக்கு பயந்து ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் வைத்து டெல்லியை சேர்ந்த ஷாருக் செய்பி (27) என்பவர் கைது செய்யப்பட்டார்.

ஷாருக் செய்பி கேரள போலீசின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், மத்திய ஏஜென்சிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. தீ வைப்பு சம்பவத்திற்கு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம்? என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து தான் மத்திய ஏஜென்சிகள் விசாரணையை தொடங்கின. இந்தநிலையில் ஷாருக் செய்பி மீது கேரள போலீசார் தீவிரவாத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விரைவில் என்ஐஏவுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது.

  • தீ வைக்கும் திட்டத்துடன் தான் கேரளா வந்தார்

கேரள சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அஜித்குமார் கூறியதாவது:
ஷாருக் செய்பியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு முக்கிய விவரங்கள் கிடைத்துள்ளன. இதன் அடிப்படையில் தான் அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீ வைத்தது தான் தான் என்று ஷாருக் செய்பி ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. இவர் தீவிரவாத எண்ணம் கொண்டவர். ஜாகீர் நாயக், இஸ்ரா அகமது போன்றோரின் வீடியோக்களை அடிக்கடி பார்த்து வந்துள்ளார். ரயிலில் தீ வைக்க வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இவர் கேரள வந்துள்ளார். இவருக்கு வேறு யாருடைய அல்லது அமைப்புகளின் உதவி கிடைத்துள்ளதா என்று விசாரணை நடந்து வருகிறது. இவர் தற்போது தான் முதன் முறையாக கேரளா வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளை கொளுத்திய ஷாருக் செய்பி மீது உபா சட்டம் பாய்ந்தது: என்ஐஏவுக்கு வழக்கு மாற்றப்படுகிறது? appeared first on Dinakaran.

Tags : Shah Rukh Seibi ,Kerala ,UPA ,NIA ,Thiruvananthapuram ,Shahrukh ,Kozhikode, Kerala ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...