×

செவித் திறன் மாற்றுத்திறனாளிகளுக்காக சட்டப்பேரவை நடவடிக்கைகள் சைகை மொழியில் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: செவித் திறன் மாற்றுதிறனாளிகளுக்காக, தமிழ்நாடு சட்டப் பேரவை நடவடிக்கைகள் சைகை மொழியில் ஒளிபரப்பு செய்வதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகத்தின் சார்பில், செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகளின் தொகுப்பினை ஊடகங்கள் மூலமாக ஒளிபரப்பு செய்திடும் நிகழ்வை தலைமை செயலகத்தில் நேற்று சபாநாயகர் மு.அப்பாவு முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம்-2016ல் வலியுறுத்தியுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் தடையற்றச் சூழலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளின் தகவல் பரிமாற்றத்திற்காக, மாவட்ட ஆட்சியர்களால் நடத்தப்படும் கூட்டங்கள் உட்பட அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சைகை மொழி பெயர்ப்பாளர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நடைபெறும் 2023-24ம் ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்ச்சிகளை செவித்திறன் மாற்றுத்திறனாளிகளும் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் சைகை மொழிபெயர்ப்பாளர் மூலமாக சைகை விளக்க காணொலி தயாரித்து செய்தி மக்கள் தொடர்புத் துறை வாயிலாக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்திட நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதல்வர் ஆணையிட்டார்.

அதன்படி, செவித்திறன் மாற்றுத் திறனாளிகள் அறிந்துகொள்ளும் வகையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு, யூடியூப் மூலமாகவும், ஊடகங்கள் வாயிலாகவும் ஒளிபரப்பு செய்திடும் வகையில், சைகை மொழியில் பதிவு செய்து வழங்கும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, பி.கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் டாக்டர் ஆர்.ஆனந்த குமார், சட்டப் பேரவைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post செவித் திறன் மாற்றுத்திறனாளிகளுக்காக சட்டப்பேரவை நடவடிக்கைகள் சைகை மொழியில் ஒளிபரப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Dinakaran ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...