×

ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் புதிய முயற்சி எதிரொலி கர்நாடகாவில் தனித்துப் போட்டி முடிவில் அதிமுக: அமித்ஷாவுடன் மோத தயாராகும் எடப்பாடி பழனிசாமி; அண்ணாமலை சீண்டுவதின் பரபரப்பு பின்னணி தகவல்கள்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை போல கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறார். பாஜ கூட்டணியில் சீட் கொடுக்க மறுப்பதால், தனித்துப் போட்டியிடுவதற்கான பணிகளை அவர் தொடங்கியுள்ளார். இதனால் பாஜவுடன் மீண்டும் மோதலை தொடங்குவார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர். எடப்பாடியை மிரட்டுவதற்காகத்தான் அண்ணாமலை அவரை தாக்க தொடங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 4 அணிகளாக உடைந்துள்ளது. ஆனாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்குத்தான் தற்போது அதிமுக என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதிமுகவில் தனக்கும் பங்கு உண்டு என்று ஓ.பன்னீர்செல்வம் மட்டும் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அதேபோல சட்டப்போராட்டம் நடத்தினார். இதனால் தான், இடைத்தேர்தலின்போது பாஜ யாருக்கும் ஆதரவு அளிக்காமல் இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கிடைத்ததால், பன்னீர்செல்வம் போட்டியில் இருந்து ஒதுங்கினார். பாஜ, எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தது.

இந்நிலையில் கர்நாடக தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனு தாக்கல் தொடங்கிவிட்டது. அங்கு 15 தொகுதிகளுக்கு மேல் தமிழர்கள் அதிகமாக உள்ளனர். அங்கு ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது அதிமுக போட்டியிட்டுள்ளது. தற்போது பாஜவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால், அதிமுகவின் ஆதரவை கேட்டு அமித்ஷா, எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து பேசினார். ஆனால் அமித்ஷா கேட்டும், இதுவரை பாஜவுக்கு எடப்பாடி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக, அதிமுகவுக்கு 3 முதல் 5 சீட் ஒதுக்கும்படி பாஜ மேலிடத்தில் எடப்பாடி கேட்டு வருகிறார்.

அவ்வாறு பாஜ கூட்டணியில் அதிமுக போட்டியிட்டால், தேர்தல் ஆணையம் கண்டிப்பாக இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும். இதனால் ஓ.பன்னீர்செல்வம் நிரந்தரமாக அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்படுவார். இதற்காகவே, கூட்டணியில் சீட் கேட்டு வருகிறார். ஆனால் அமித்ஷாவோ, சீட் தர முடியாது. ஆதரவு மட்டுமே வேண்டும் என்று கூறி வருகிறார். இது தெரிந்ததும், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாநில தலைவர் புகழேந்தி மூலம் பாஜ கூட்டணியில் சீட் கேட்டு வருகிறார். இல்லாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் அவர் தீர்மானித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் தனித்துப் போட்டியிட்டால், எடப்பாடியும் தனித்துப் போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்போது இருவரும் இரட்டை இலை கேட்டால், யாருக்கும் ஆதரவு இல்லை என்று தேர்தல் ஆணையம் கை விரிக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதி வேட்பாளரை நிறுத்த முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளார். அதேநேரத்தில் பாஜ கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கும்படி அதிமுக கேட்டு வருகிறது. சீட் ஒதுக்காத பட்சத்தில் தனித்துப் போட்டியிடவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். போட்டியிடா விட்டால், ஓ.பன்னீர்செல்வம் அணி மட்டுமே போட்டியிடும். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கினால் என்ன செய்வது என்று எடப்பாடி கருதுகிறார். இதனால் தனித்துப் போட்டியிடலாமா என்று தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இது தெரிந்துதான், எடப்பாடி பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க அவரை அண்ணாமலை வம்புக்கு இழுத்துள்ளார். அதிமுகவினர் 15 பேரின் சொத்துப் பட்டியலையும், ஊழல் பட்டியலையும் தயாரித்துள்ளார். கர்நாடகாவில் பாஜவுக்கு எடப்பாடி ஆதரவு தராவிட்டால் அவர்களது சொத்துப் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறார். இதை தெரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, பாஜ மேலிடத்துடன் மோதவும் தயாராகி வருகிறார். இதனால் கர்நாடக தேர்தலையொட்டி அதிமுக, பாஜ மோதல் மீண்டும் தொடங்கியுள்ளது, தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • பாஜ கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்கும்படி அதிமுக கேட்டு வருகிறது. சீட் ஒதுக்காத பட்சத்தில் தனித்துப் போட்டியிடவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.
  • இது தெரிந்துதான், எடப்பாடி பழனிசாமியை மிரட்டி பணிய வைக்க அவரை அண்ணாமலை வம்புக்கு இழுத்துள்ளார்.
  • அதிமுகவினர் 15 பேரின் சொத்துப் பட்டியலையும், ஊழல் பட்டியலையும் தயாரித்துள்ளார்.
  • கர்நாடகாவில் பாஜவுக்கு எடப்பாடி ஆதரவு தராவிட்டால் அவர்களது சொத்துப் பட்டியலை வெளியிட தயாராகி வருகிறார்.

The post ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் புதிய முயற்சி எதிரொலி கர்நாடகாவில் தனித்துப் போட்டி முடிவில் அதிமுக: அமித்ஷாவுடன் மோத தயாராகும் எடப்பாடி பழனிசாமி; அண்ணாமலை சீண்டுவதின் பரபரப்பு பின்னணி தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : O. Panneerselvam ,Karnataka ,Edappadi Palaniswami ,Amit Shah ,Annamalai Sinduva ,Chennai ,Karnataka Assembly ,Erode East ,BJP ,Annamalai scandal ,Dinakaran ,
× RELATED கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மிக...