×

வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.12 கோடி பொருட்கள் கருகி சேதம்: வெடி விபத்தா? எரிகல் விழுந்ததா? போலீசார் விசாரணை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஊதுபத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.12 கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதமாகியுள்ளது. விபத்திற்கான காரணம் ஏதேனும் வெடிபொருள் வெடித்ததா அல்லது எரிகல் விழுந்து தீப்பிடித்ததா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஊதுபத்தி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு மிக விலை உயர்ந்த பல்வேறு வர்ணங்கள் பூசி பேன்சி ரக ஊதுபத்திகள் தயாரிக்கப்படுகிறது. இந்த ஊதுபத்திகள் அனைத்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக உயர்ரக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறதாம்.

இந்நிலையில் நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் தொழிற்சாலையில் பயங்கர வெடிசத்தம் கேட்டுள்ளது. இந்த வெடிச்சத்தம் அருகே உள்ள கிராமங்களுக்கு கேட்டுள்ளது. அருகே உள்ள வீடுகள், கடைகள், அம்பலூர் போலீஸ் நிலைய கட்டிடங்கள் அதிர்ந்துள்ளது. தொழிற்சாலையின் மேற்கூரைகள் பல அடி தூரத்திற்கு மேல் பறந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது தொழிற்சாலை தீப்பற்றி எரிந்துகொண்டிருந்தது தெரிய வந்தது. ஊதுபத்தி, மற்றும் மூலபொருட்கள் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து உடனடியாக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து விடிய விடிய 6 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் இன்று காலையும் ஒரு சில இடங்களில் புகை வந்துள்ளது. எனவே தொடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்தது. இந்த தீ விபத்தில் தொழிற்சாலையின் ஒரு யூனிட் குடோனில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த ஊதுபத்திகள் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து சேதமானது தெரியவந்தது. உயர்ரக இயந்திரங்களும் கருகி சேதமானதாக கூறப்படுகிறது. மொத்தம் ரூ.12 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமாகியிருக்கலாம் என தெரிகிறது.

விடுமுறை தினமான நேற்று ஊழியர்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தகவலறிந்த கலெக்டர் பாஸ்கரபாண்டியன், எஸ்பி பாலகிருஷ்ணன் ஆகியோர் நள்ளிரவில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, டிஎஸ்பி விஜயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பயங்கர சத்தத்துடன் வெடித்து, அருகில் உள்ள கட்டிடங்கள் அதிர்ந்ததால் தொழிற்சாலையில் ஏதேனும் வெடிபொருள் வெடித்து தீப்பிடித்ததா அல்லது எரிகல் ஏதேனும் விழுந்து தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதா? என்ற சந்தேகத்தின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் எரிகல் விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ரூ.12 கோடி பொருட்கள் கருகி சேதம்: வெடி விபத்தா? எரிகல் விழுந்ததா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Udupatti factory ,Vaniyambadi ,Erikal ,VANIYAMBATI ,Vaneyambandi ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் கேன்டீன் ஊழியரை...