×

ஆவடி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

ஆவடி: ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். ஆவடி புதிய ராணுவ சாலையில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் ஆவடி மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு வகையான மருத்துவ வசதிகளை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனைக்கு தினமும் 1200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைபெற்று செல்கின்றனர். இங்கு கொரோனா தொற்று காலத்தில் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். அப்போது அங்குள்ள சில நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்பட்டது. அப்போது, அவர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட செறிவூட்டிகள் மூலம் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டது. மேலும் அங்கு ஆக்சிஜன் உற்பத்திநிலையம் அமைக்கவேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர். இதற்காக, அவர் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்துவந்தார். இதற்கிடையில், ஒரு தனியார் நிறுவனம் சமூக பங்களிப்பு நிதியின் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைக்க முன் வந்தது. சமீபத்தில், ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆக்ஜிசன் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் முடிந்தன. இதனை, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, `மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கும் வசதி உள்ளது. தற்போது, ஆவடி அரசு பொது மருத்துவமனையில் புதிய ஆக்ஜிசன் உற்பத்தி நிலையம் மூலம் 65க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஒரே நேரத்தில் ஆக்சிஜன் மருத்துவ வசதியை அளிக்கலாம். மேலும், மாவட்டத்தில் 1700க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் 40 தொழிற்சாலைகள் மட்டுமே சமூக பங்களிப்பு நிதியை அளித்துள்ளது. மீதி உள்ள தொழிற்சாலைகள் நிதி அளிக்காமல் உள்ளது. மேற்கண்ட தொழிற்சாலைகள் சமூக பங்களிப்பு நிதியை அளித்தாலே, பல்வேறு திட்டப்பணிகளை, நாம் அரசு எதிர்பார்க்காமலேயே செய்து முடிக்கலாம். இதனை, பெற்றுத்தர மாவட்ட கலெக்டர்  முயற்சி எடுக்க வேண்டும்,’ இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கே.ஜெயக்குமார் எம்பி, மருத்துவத்துறை இணை இயக்குனர் டாக்டர் சாந்தி, ஆவடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் காவலன்,  மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் உமா மகேஸ்வரி. திமுக மாவட்டக்குழு உறுப்பினர் வி.சிங்காரம்,  காங்கிரஸ் நிர்வாகிகள் லயன் டி.ரமேஷ், எஸ்.பவன்குமார், இ.யுவராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்….

The post ஆவடி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்: அமைச்சர் நாசர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Avadi Government Hospital ,Minister ,Nasser ,Aavadi ,Dairy Minister ,S.M. Nasar ,Aavadi Government General Hospital ,Avadi New Army… ,Avadi ,Government ,Hospital ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி