×

மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களையும் ஒன்றிய அரசு முடக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களையும் ஒன்றிய அரசு முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த சபாநாயகம் என்பவர் ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்ட செயலியால் சுமார் ரூ.90 லட்சம் தொகையை இழந்த வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக நாம் அறிகின்ற செய்தி வேதனையளிக்கிறது. சூதாட்டத்திற்கு தடை என்று சொல்லும் போது, அனைத்துவித ஆன்லைன் சூதாட்டங்களுக்கும் தடை விதித்திட வேண்டும்.

முக்கியமாக நான் ஏற்கெனவே பலமுறை தெரிவித்தது போல, இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளான ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், சவுதி அரேபியா, சிரியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆபாச இணையதளங்களை அங்குள்ள குடிமக்கள் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத வகையில் ஒட்டுமொத்த நாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறி செயல்படுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் விதியும் நடைமுறையில் உள்ளது. மாநிலங்களுக்குள் செயலிகளுக்கு தடை என்றிருந்து, மத்தியில் செயலிகளுக்கு அனுமதி என்றிருந்தால் பயன் கிடையாது. எனவே, அனைத்துவித ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கும், ஆபாச இணையதள செயலிகளுக்கும் நிரந்தரத் தடை விதிக்க ஒன்றிய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவெடுத்து முழுமையான தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post மக்கள் நலனுக்கு கேடு விளைவிக்கும் ஆபாச இணையதளங்களையும் ஒன்றிய அரசு முடக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Sarathkumar ,Chennai ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...