×

ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழப்பு.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!!

மும்பை : நவி மும்பையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திறந்த வெளியில் அமரவைக்கப்பட்டு இருந்த பார்வையாளர்கள் 13 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். மராட்டிய மாநிலம் நவி மும்பை கார்கரில் மகாராஷ்டிரா பூஷன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று விருதுகளை வழங்கினார். மராட்டிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்நாவிஸ் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர். நவி மும்பையில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கானோர் வரவழைக்கப்பட்டனர். மேடை நிகழ்ச்சிகளை காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டு இருந்த நிலையில், கொளுத்தும் வெயிலுக்கு பாதுகாப்பாக பந்தல் எதுவும் போடப்படவில்லை.

நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கிய பரிசளிப்பு விழா மதியம் 2 மணி வரை நடைபெற்றது. அந்த நண்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்ஸியஸ் வரை பதிவாகி இருந்தது. இதனால் கூட்டத்தில் அமர்ந்திருந்த பலரும் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மராட்டிய முதல்வர் அலுவலகம் உறுதி செய்துள்ளது. வெயிலின் தாக்கத்தால் 50க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் அலட்சியமாக செய்யப்பட்டதால் 11 அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

The post ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற விழாவில், வெயிலின் தாக்கத்தால் 13 பேர் உயிரிழப்பு.. ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amitsha ,Mumbai ,Home Minister ,Navi Mumbai ,
× RELATED சாலை மோசமாக இருந்தால் சுங்கக் கட்டணம்...