×

தீத்தொண்டு வார விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: வேலூர் சரக டிஐஜி தொடங்கி வைத்தார்

வேலூர், ஏப்.17: தீத்தொண்டு வாரத்தையொட்டி விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பை விக்டோரியா துறைமுகத்தில் 1944ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 66 பேர் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா முழுவதும் மீட்பு பணியின்போது உயிர் நீத்தவர்களை நினைவுகூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஒருவார காலமும் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு, தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூர் தீயணைப்பு நிலையத்தில் நேற்று காலை மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர்கள் முகுந்தன், பழனி, வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தணிகைவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். 10 கிலோ மீட்டர் தூரம் நடந்த மாரத்தான் ஓட்டம் தீயணைப்பு நிலையத்தில் தொடங்கி புதிய மாநகராட்சி அலுவலகம், முஸ்லிம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, தொரப்பாடி மத்திய சிறை, பாகாயம் வழியாக சென்று மீண்டும் ஓட்டேரி, விருபாட்சிபுரம், வேலப்பாடி வழியாக வந்து தீயணைப்பு நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆண்கள், பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற முதல் 3 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் பரிசுகளும், கேடயங்கள், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

The post தீத்தொண்டு வார விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்: வேலூர் சரக டிஐஜி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Vellore Saraka ,Vellore ,Sarraka ,Vellore Sarraka ,DIG ,Muthusamy ,Firefly Weekend Awareness Marathon ,Saraka ,Dinakaran ,
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...