×

30 ஆண்டு சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி திடீர் சாவு

சேலம்: கர்நாடகா மாநிலம் மைசூரில் ஆயுள் கைதியாக 30 ஆண்டுகள் சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி மீசக்கார மாதையன், உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே செங்கப்பாடியை சேர்ந்தவர் மீசக்கார மாதையன் (73), சந்தன கடத்தல் மன்னன் வீரப்பன் கூட்டாளி. இவர், கடந்த 1993ல் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் கர்நாடகா காவல்துறையில் சரணடைந்தார். அவருடன் சைமன், பிலவேந்திரன், ஞானபிரகாசம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மீசக்கார மாதையன் மீது 4 தடா வழக்கை கர்நாடகா போலீசார் பதிவு செய்தனர். இவ்வழக்குகளில் அவர் உள்பட 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு உச்சநீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டு வழக்கில், 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், தூக்கு தண்டனையை குறைக்க ஜனாதிபதிக்கு கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால், அம்மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியதில் 4 பேருக்கும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து மைசூர் சிறையில் இருந்த நிலையில் கடந்த 2018ல் சைமனும், 2022ல் பிலவேந்திரனும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தனர். ஞானபிரகாசம், பரோலில் வெளியே வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மைசூர் சிறையில் 30 ஆண்டுகளாக இருந்த மீசக்கார மாதையனுக்கு கடந்த 11ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை மைசூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நினைவிழந்த நிலைக்கு சென்றார். இதனால், மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை மீசக்கார மாதையன் உயிரிழந்தார்.

30 ஆண்டுகள் சிறையில் இருந்து இறந்த மீசக்கார மாதையனின் மனைவி தங்கம்மாள், மேட்டூர் செங்கபாடியில் உள்ள தனது 2வது மகன் பரமசிவனுடன் வசிக்கிறார். மூத்தமகன் மாதேஷ், வீரப்பன் குழுவில் இருந்தபோது 1998ல் அதிரடிப் படை போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால், தற்போது அவரது குடும்பத்தில் மனைவி தங்கமாளும், மகன் பரமசிவன் குடும்பத்தினரும் உள்ளனர். அவர்களிடம் மீசக்கார மாதையனின் உடலை ஒப்படைக்க மைசூர் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனால், அவரது உடலை மேட்டூர் கொண்டு வந்து அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

The post 30 ஆண்டு சிறையில் இருந்த வீரப்பன் கூட்டாளி திடீர் சாவு appeared first on Dinakaran.

Tags : Veerappan ,Salem ,Meesakkara Mathayan ,Mysore, Karnataka ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பிறந்தநாளை கேக்...