×

இலை கட்சியை கைப்பற்ற சின்ன மம்மி தரப்பு தேனிக்காரருக்கு கரன்சி உதவி செய்வதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

‘‘பிரியாணியில் காட்டிய அக்கறையை பேனரில் காட்டாமல் போனது பற்றி எந்த கட்சியினர் அலுத்து கொண்டார்களாம்…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மாங்கனி நகரில் தேனிக்காரர் நடத்தும் திருச்சி மாநாடு குறித்த நிர்வாகிகள் கூட்டம் நடந்துச்சாம். அந்த கூட்டத்துல மாநகர நிர்வாகிகள் 50 பேரு கூடினாங்க. கூட்டத்தில் பங்கேற்ற பெங்களூருகாரரு உணர்ச்சி பொங்க கட்சியின் தலைவர் மாதிரி பேசியும், அவரை போல தொப்பி அணிந்தும் வந்தாராம். அந்த தொப்பி எல்லாம் இலை கட்சியின் தலைவருக்குதான் பொருந்தும். வேறு யாரும் இப்படி போட்டு கொண்டு வந்தாலும் அது நகல்னு தெரிந்துவிடும் என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டும், அதை நினைத்து சிரித்தபடியும் இருந்தாங்க. அதையெல்லாம் கண்டு கொள்ளாத பெங்களூருகாரர், இலை கட்சியின் விவிஐபியை வார்த்தையில் வறுத்தெடுத்தாராம். எல்லாம் முடிஞ்சி பிரியாணி சாப்பிட நிர்வாகிகள் ரெடியானாங்களாம்.

அதற்கு முன்னாடி, பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினாராம். அதில ஒருத்தரு, உங்க ஆலோசனை கூட்ட பேனரில் இலை கட்சியின் பெயரே இல்லையே… நீங்க வேறு கட்சி சின்னத்துக்கு அப்ளை பண்ணியிருக்கீங்களா… இல்லை இலை கட்சியில இருக்கீங்களானு ஒரு குண்டை தூக்கி போட்டாராம். இலை சின்னம் பேனர்ல இருக்குமே என்றபடி பின்னாடி திரும்பி பார்த்த பெங்களூருகாரரு. அதோ அண்ணன் தலைக்கு பின்னால் லேசா தெரியுது பாருங்க எனக்கூறி சமாளிச்சாராம். பக்கத்தில இருந்த உள்ளூரு நிர்வாகிகள், பிரியாணி வரைக்கும் சரியாகவும் சுவையாகவும் ஏற்பாடு செஞ்சிபுட்டு, இப்படி பேனர்ல கட்சி பெயர் சின்னத்தை கோட்டை விட்டுட்டோமேனு புலம்பிக்கிட்டே போனாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சின்ன மம்மியின் ஆசி, கரன்சி பெற்று நடத்தும் இலை கட்சி தலைவர் யாரு… எந்த ஊரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஒற்றைத் தலைமை பிரச்னையால், இலை கட்சி பிளவுபட்டுள்ள நிலையிலும், தற்காலிகமாக சேலம்காரர் அப்பதவியில் அமர்ந்திருந்தாலும், இலை கட்சியை கைப்பற்ற தேனிக்காரர் போராடி வருகிறார். அவருக்கு மறைமுகமாக சின்ன மம்மியும் ஆதரவு தெரிவித்து, நிதியும் வழங்குகிறாராம். கடைசி ஆயுதமாக திருச்சியில் வரும் 24ம் தேதி தேனிக்காரர் கட்சியின் சார்பாக தலைவர்கள் பிறந்த நாள் விழா, கட்சி விழா எஎன்று என முப்பெரும் விழாவை நடத்த உள்ளாராம். அதில், உட்கார, நிற்கவே இடமில்லாத வகையில் தொண்டர்களை அழைத்து வந்து சேலம்காரரை மிரள வைக்க வேண்டும்.

அப்போதுதான் நான் என் ழுழு பலத்தை நிரூபிப்பதாக இருக்கும் என்று தன் சகாக்களிடம் சொல்லி வருகிறாராம். இதற்கு, லட்சக்கணக்கான தொண்டர்களை அழைத்து வர வேண்டும் என ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ‘அணியில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது ஆயிரம் பேரையாவது அழைத்து வர வேண்டும். அப்போதுதான் விழாவில் லட்சம் பேர் திரண்டனர் என நாம் தில்லாக பேச முடியும். ஊசலாட்டத்தில் உள்ள தொண்டர்கள், சேலம்காரரை விட்டு நம் அரசியல் கூட்டத்தை பார்த்து நம் பக்கம் வருவார்கள்’ என்று கூலாக பிளஸ் பாயின்ட்டுகளை சொன்னாராம். எல்லாம் கேட்டுக் கொண்ட மாவட்டச் செயலாளர்கள், ‘ஆட்சி காலத்திலயும் நாங்க எதுவும் சம்பாதிக்கவில்லை. உங்களையே நம்பி இருந்திட்டோம். இப்பச் செலவுக்கு கவனிச்சு விடுங்கண்ணே…’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள்.

பணம் என்றவுடன் தேனிக்காரர் வழக்கம் போல வாயே திறக்காமல் மவுனமாகி விட்டாராம். பணத்துக்காக வட்டமிடும் ஆதரவாளர்களை சமாளிப்பதற்காக, ‘கூட்டத்துக்கு சின்ன மம்மியும் வர்றாங்க…’ என்று கொளுத்தி விட்டாராம். ஆனால், அதை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், அனுபவஸ்தர்கள் சீரியசாக எடுத்து கொள்ளவில்லையாம். ‘இதேபோன்ற சூழ்நிலை என்றால், சேலத்துக்காரர் தரப்பு பணத்தை அள்ளி வீசி, ஆளைச் சேர்க்கும். நம்ம நிலைமை இப்படி இருக்கே… செலவுக்கு என்ன பண்றது… எப்படி ஆள் திரடுட்றது…’ தேனி தரப்பு ஆதரவாளர்கள் திண்டாட்டத்தில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரேஷன் அரிசி கடத்தல்காரரிடமே 50 கே கரன்சி வசூலித்த அதிகாரியை பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்துல காட்டுப்பாடி தாலுகாவுல பொன்னான ஏரியா, மாநில எல்லையில அமைஞ்சிருக்குது. இங்க, இருந்து தினமும் பக்கத்து மாநிலமானஆந்திராவுக்கு லாரிகள், வேன்கள் என்று ரேஷன் அரிசி கடத்தல் நடக்குதாம். இதனை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருது. ஆனா, வெயிலூர் மாவட்டத்துல இருக்குற பறக்குற அதிகாரி பொன்னான ஏரியாவுல கடந்த சில நாட்களுக்கு முன்னாடி ரெய்டு நடத்தியிருக்காங்க. அப்போ, அந்த ஏரியாவுல இருக்குற முக்கிய புள்ளி ஒருத்தர் அரிசி கடத்தல்ல சிக்கியிருக்காரு. அவர்கிட்ட பறக்கும் அதிகாரி 50 கே வரைக்கு பேரம் பேசி வசூலித்துவிட்டாராம். 50 கே கைக்கு வந்ததும், இனிமே, அதிகாரிங்களுக்கு செய்ய வேண்டியதை செஞ்சிட்டு நீங்க கடத்தலை செஞ்சிக்களாம்னு சொல்லிட்டு பறந்துட்டாராம். இந்த விஷயம் தான் இப்ப வெயிலூர் மாவட்டத்தில் காட்டு தீ போல பரவி வருதாம். இதனால கண் துடைப்புக்கு கணக்கு காட்டுற அதிகாரிகள் மேல, நடவடிக்கை எடுக்கணும். அப்பத்தான் இந்த கடத்தல தடுக்க முடியும்னு விஷயம் ெதரிஞ்சவங்க பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post இலை கட்சியை கைப்பற்ற சின்ன மம்மி தரப்பு தேனிக்காரருக்கு கரன்சி உதவி செய்வதை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Karansi ,Priyana ,Bannar ,Peter ,Mangani ,Kransi ,wiki ,
× RELATED இலை கட்சியின் மாஜி அமைச்சர்...