×

இளைஞர்களை ஏமாற்றி திருமணம்: நகைகள், பணத்துடன் மாயமான பெண் 2 புரோக்கர்களுடன் கைது

கரூர்: தமிழகம் முழுவதும் இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பணம், நகைகளுடன் மாயமான பெண், உடந்தையாக இருந்த 2 புரோக்கர்களுடன் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். கரூர் பசுபதிபாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (36). பைனான்ஸ் நடத்தி வரும் இவருக்கும், புரோக்கர்கள் மூலம் அறிமுகமான தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த பொன்தேவி (30) என்ற பெண்ணுக்கும் கடந்த பிப்ரவரி 12ம்தேதி கரூர் வெண்ணைமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.

இதில் மாப்பிள்ளை தரப்பில் உறவினர்கள், நண்பர்களும், பெண் தரப்பிலிருந்து இடைத்தரகர்களான அமிர்தவள்ளி, பாலமுருகன், அவரது சித்தி நாகலட்சுமி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தின் போது மணமகன் தரப்பில் மணமகளுக்கு தாலி செயின், பிரேஸ்லெட், மோதிரம் என எட்டே முக்கால் பவுன் போட்டுள்ளனர். திருமணம் முடிந்து 15ம் தேதியன்று மறுவீட்டுக்கு சித்தி நாகலட்சுமி சிவகாசிக்கு அழைத்துள்ளார். இதனால் விக்னேஷ்வரன், தனது மனைவி பொன்தேவியை அழைத்துக்கொண்டு சிவகாசிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு விக்னேஷ்வரனை மட்டும் வீட்டில் விட்டு விட்டு சித்தியின் குழந்தைகளுக்கு துணி எடுத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.8,500 வாங்கிக் கொண்டு வெளியில் சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி விக்னேஷ்வரன், சிவகாசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 12ம்தேதி ஈரோட்டில் ஒரு இளைஞருடன், மனைவி பொன்தேவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்று தேடிய போது கிடைக்கவில்லை.

13ம் தேதி மதுரை மாட்டு தாவணி அருகே பொன் தேவி மற்றும் புரோக்கர்கள் விருதுநகர் மாவட்டம் நத்தத்துப்பட்டியை சேர்ந்த அமிர்தவள்ளி (45), வெம்பகோட்டையை சேர்ந்த பாலமுருகன்(43) ஆகிய 3 பேரையும் மதுரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். இதில் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் பொன் தேவி மாயமானதாக புகார் பதிவாகியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிவகாசி மற்றும் கரூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை போலீசார் மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், பொன் தேவிக்கு முதலாவதாக தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கார்த்தி என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளது. பின்னர் கரூர், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், சேலம், அவினாசிபாளையத்தை சேர்ந்த இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதோடு, அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பறித்து உள்ளார். பொன் தேவியின் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு இளைஞர்களை ஏமாற்றியது தெரிய வந்தது’ என்றனர்.

The post இளைஞர்களை ஏமாற்றி திருமணம்: நகைகள், பணத்துடன் மாயமான பெண் 2 புரோக்கர்களுடன் கைது appeared first on Dinakaran.

Tags : Karur ,Tamil Nadu ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...