×

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க போக்சோ நீதிமன்றங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்: ஒரு மாவட்டத்தில் 300க்கும் கூடுதலான ‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்’ குறித்த வழக்குகள் நிலுவையில் இருந்தால், அங்கு இரு சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் 300க்கும் கூடுதலான வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அங்கு கூடுதல் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கவில்லை. தருமபுரி, திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று கடந்த 2021ம் ஆண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது.

ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இன்று வரை அந்த நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மனித மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தாமதிப்பது, குற்றவாளிகள் தப்பிக்கவும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகுவதற்கும் மட்டுமே வகை செய்யும். தமிழ்நாடு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக மாற வேண்டும். அதற்கு குற்றம் செய்தவர்கள் உடனுக்குடன் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அனைத்து மாவட்டங்களிலும் போதிய எண்ணிக்கையில் சிறப்பு போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும்.

The post குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க போக்சோ நீதிமன்றங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : POCSO ,Ramadoss ,Chennai ,Ramadas ,Ramdas ,Dinakaran ,
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...