×

பாஜவுக்கு தென்னிந்திய வாசல் மூடப்பட்டுவிட்டது கர்நாடகாவில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி பேட்டி

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பாஜவுக்கு தெற்கு வாசல் மூடப்பட்டுவிட்டது. காங்கிரஸ் 130க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்கட்சியாக ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி தெரிவித்தார்.கர்நாடக முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் அலை வீசுகிறது. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 130 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். பாஜ 60 இடங்களை பெறுவதே மிக கடினம். பாஜவுக்கு தென்னிந்திய வாசல் முழுமையாக மூடப்பட்டுவிட்டது. பாஜவில் மூத்த தலைவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கட்சியை விட்டு விலகிவருகிறார்கள். மேலும் அக்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகளில் சேர்ந்து வருகிறார்கள்.

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி முழுமையாக தோல்வி கண்டுவிட்டது. ஊழல் தான் பாஜவின் கொள்கையாக உள்ளது. 40 சதவீத கமிஷன் ஆட்சி இதற்கு சிறந்த உதாரணம். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் டபுள் இன்ஜின் ஆட்சி என்று அடிக்கடி கூறினார்கள். ஆனால் இதுவரை ஒரு திட்டம் கூட கர்நாடகாவில் நிறைவேறவில்லை. ஒரு தொழிற்சாலை கூட அமையவில்லை. வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆசிரியர் பணி உள்பட பல்வேறு துறைகளில் பணி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது.

பிரதமர் மோடியின் வாய்ஜாலம் கர்நாடகாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழகத்தில் அவர்கள் முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதே போல் பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரசாரம் கேரளாவில் எடுபடவில்லை. இமாசல பிரதேசம், மேற்கு வங்கத்திலும் அவர்கள் பிரசாரம் எடுபடவில்லை. கர்நாடகாவிலும் இவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.

அமுல் மற்றும் நந்தினி நிறுவனத்தை ஒன்றிய அரசு இணைக்க முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சதி. பாஜ மீண்டும் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் அமித்ஷாவின் சதி அரங்கேறிவிடும் என்று மக்கள் சந்தேகிக்கிறார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் வெற்றி முன்னுதாரணமாக அமையும். மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா ஒரு சந்தர்ப்பவாதி. அவர் பாஜவுடன் கைகோர்த்துள்ளார். இந்த முறை அவரது கட்சியை மக்கள் நிராகரிப்பார்கள்’ என்றார்.

The post பாஜவுக்கு தென்னிந்திய வாசல் மூடப்பட்டுவிட்டது கர்நாடகாவில் காங்கிரஸ் 130 இடங்களில் வெற்றி பெறும்: முன்னாள் முதல்வர் வீரப்பமொய்லி பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,Former Chief Minister Veerappamoily ,Bengaluru ,Karnataka ,Former Chief Minister ,Veerappamoily ,Dinakaran ,
× RELATED அமேதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வேட்புமனு..!!