×

சிறையில் அடைத்தாலும் பாஜவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன்

  • அதானி-மோடி குறித்து கேள்வி கேட்டு கொண்டே இருப்பேன்
  • கோலாரில் நடந்த மாநாட்டில் ராகுல்காந்தி ஆவேசம்

பெங்களூரு: எம்பி பதவி பறிக்கப்பட்ட நிலையில் என்னை சிறையில் அடைத்தாலும் பாஜவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே என்ன சம்பந்தம் என்பதை கேட்டுக்கொண்டே இருப்பேன் என கோலாரில் நடந்த மாநாட்டில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார். கர்நாடக மாநில சட்டசபைக்கு மே 10ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி கர்நாடக மாநிலம் கோலாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜெய்பாரத் மாநாடு நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:

நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசக்கூடாது என்பதால் எம்பி பதவியை ரத்து செய்துள்ளனர். இதற்கு நான் கவலைப்படவில்லை. அது போல் என்னை சிறையில் அடைத்தாலும் அடிபணிய மாட்டேன், அதானி, பிரதமர் மோடி இடையே என்ன சம்பந்தம் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டே இருப்பேன். இதை யாராலும் தடுக்க முடியாது. இடஒதுக்கீடு விஷயத்தில் ஒன்றிய பாஜ அரசு ஏழை எளிய மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறையின் செயலாளர்களில் பெரும்பான்மையான நபர்கள் உயர் சாதி வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர். எஸ்சி.எஸ்டி., பின்தங்கிய வகுப்பினர் உள்ளிட்டோர் 7 சதவீதம் மட்டுமே உயர் பதவிகளில் உள்ளனர்.

பாஜ அரசு 40 சதவீத கமிஷன் பணத்தை பயன்படுத்தி ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. கர்நாடக மக்கள் பாஜவின் இந்த முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கொள்ளை அடித்த பணத்தை பயன்படுத்தி ஆட்சி அமைக்கும் பாஜவின் முயற்சி தோல்வி அடையும் . மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை 150 இடங்களில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கர்நாடக மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். 2011ல் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தாலும் அது அமல்படுத்தப்படவில்லை. இதுதான் பாஜவின் உண்மையான முகம் என்ன என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கணக்கெடுப்பு முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

  • ஆட்சி அமைந்தவுடனே 4 வாக்குறுதி நிறைவேற்றம்

மாநாட்டில் ராகுல்காந்தி பேசும் போது, கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏற்கனவே நான்கு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. கிரக லட்சுமி திட்டத்தினால் ஒவ்வொரு வீட்டின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் அளிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் தலா 200 அலகு இலவச மின்சாரம், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000, டிப்ளமோ படித்த வேலை இல்லாத நபர்களுக்கு ரூ.1500, அன்னபாக்யா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு தலா 10 கிலோ விலை இல்லாத அரிசி வழங்குவது என்ற திட்டங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் நாளில் அமல்படுத்தப்படும் என்றார்.

The post சிறையில் அடைத்தாலும் பாஜவின் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன் appeared first on Dinakaran.

Tags : Baja ,Bengaluru ,Adani ,Modi ,Jailed Baja ,
× RELATED 140 இடங்களில் பாஜ வெற்றி பெறுவதே கடினம்: அகிலேஷ் பிரசாரம்