×

மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை

சென்னை: மீன்பிடி தடைகாலம் நேற்று துவங்கிய நிலையில், நேற்று காலை காசிமேடு மீன் மார்க்கெட்டில் வியாபாரிகள், பொதுமக்கள் மீன் வாங்க குவிந்தனர். விலை அதிகமாக இருந்தபோதிலும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைகாலம் தமிழகத்தில் கடைபிடிக்கப்படுகிறது. சென்னையின் பழவேற்காடு முதல் கன்னியாகுமரி வரையுள்ள பகுதிகளில் உள்ள விசைப்படகுகள் இந்த காலகட்டத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல அனுமதி இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தடைகாலம் தொடங்கிய நிலையில், ஏற்கனவே கடலுக்கு மின்பிடிக்க சென்ற விசைப்படகுகள் கரை திரும்பின. நேற்று கரைக்கு திரும்பிய 50க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கொண்டு வரப்பட்ட மீன்கள் நள்ளிரவு 2 மணி அளவில் ஏலம் விடப்பட்டது.

இதில், சென்னையை சேர்ந்த மீன் வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கலந்துகொண்டு மீன்களை வாங்கினர். மீன் விலை அதிகமாக இருந்தபோதிலும் ஆர்வமுடன் மீன்களை வாங்கினர். ஒரு கிலோ வஞ்சிரம் 1200 ரூபாய்க்கும், வெள்ளை வவ்வால் 1100 ரூபாய்க்கும், கருப்பு வவ்வால் ரூ.800க்கும், சங்கரா ரூ.400 ரூபாய்க்கும், கடல் இறால் ரூ.450க்கும், சுறா ரூ.500க்கும், இறால் ரூ.350க்கும், களவான் ரூ.400க்கும், நண்டு ரூ.350க்கும், சங்கரா ரூ.400க்கும், கொடுவா ரூ.650க்கும், பாறை ரூ.400க்கும், அயிலா ரூ.150க்கும், ஷீலா ரூ.450க்கும் என விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரத்தைவிட 200 முதல் 300 ரூபாய் வரை மீன்கள் அதிக விலை வைத்து விற்கப்பட்டது.

The post மீன்பிடி தடைக்காலம் எதிரொலி வஞ்சிரம் கிலோ ரூ.1,200க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kasimedu fish market ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?