×

முன்னாள் அமைச்சர்கள் பட்டியலும் தயார் எடப்பாடியின் ரூ.45,000 கோடி ஊழலை வெளியிடுவோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி

சேலம்: எடப்பாடி பழனிசாமியின் ரூ.45,000 கோடி ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்று சேலத்தில் பெங்களூரு புகழேந்தி கூறினார். திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்க உள்ள ஓபிஎஸ் அணி மாநாடு குறித்து சேலம் மாநகர் மாவட்ட ஓபிஎஸ் அணி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், சேலத்தில் நேற்று நடந்தது. இதில் பெங்களூரு புகழேந்தி கலந்துகொண்டு, திருச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது குறித்து பேசினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. ஆண்ட கட்சிகளின் ஊழலை வெளியிடுவேன் என கூறியதும், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் என ஆளாளுக்கு குதிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி மீது 11 மருத்துவக்கல்லூரி கட்டியதில் நிகழ்ந்த ஊழல் விசாரணை இருக்கிறது.

அந்த ரூ.4,800 கோடி ஊழல் தொடர்பாக விஜிலென்ஸ் விசாரிப்பார்கள். நாங்களும் எடப்பாடி பழனிசாமி மீது ரூ.45,000 கோடி ஊழலை வெளியிடப்போகிறோம். துணை ஒருங்கிணைப்பாளர் ஜே.சி.டி.பிரபாகரனும், நானும் அதனை வெளியிடுவோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4 ஆண்டுகள் நடந்த ஆட்சியில் நிகழ்ந்த ஊழலை போல், உலகில் வேறு எங்கும் ஊழல் நடக்கவில்லை. அதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் குறித்த ஊழலை பாஜ தலைவர் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அதை அவர் செய்வார்.

திருச்சியில் 24ம் தேதி ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் மாநாட்டிற்கு மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் வருவார்கள். கே.சி.பழனிசாமி, அன்வர்ராஜா வரவுள்ளனர். சசிகலாவிற்கு அழைப்பு விடுக்கவுள்ளோம். அந்த மாநாடு முடிந்ததும், 10 மண்டலங்களில் ஓபிஎஸ் தலைமையில் மாநாடு நடத்தப்படுகிறது. சேலத்திலும் மாநாடு நடத்துவோம். அடுத்தவாரம் திருச்சி மாநாடு முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி உள்பட முன்னாள் அதிமுக அமைச்சர்களில் யார்-யார் எவ்வளவு ஊழல் செய்துள்ளனர் என்ற பட்டியலை வெளியிடுவோம். நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்.

ஏற்கனவே முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது நான் விஜிலென்சில் புகார் கொடுத்துள்ளேன். ஒரு கிலோ சர்க்கரை மார்க்கெட்டில் ரூ.37க்கு விற்கும்போது ரூ.47க்கு வாங்கியிருக்கிறார். மாதம் 20 ஆயிரம் டன் என்ற கணக்கில் அதிக விலைக்கு வாங்கி கோடிக்கணக்கில் ஊழல் புரிந்துள்ளார். அதேபோல், பாமாயில் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளது. எனது புகாரின் மீது விஜிலென்ஸ் ேபாலீசார் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு பெங்களூரு புகழேந்தி கூறினார்.

*ஜெயக்குமாருக்கு ரூ.200 கோடி எங்கிருந்து வந்தது?
பெங்களூரு புகழேந்தி கூறுகையில், ‘முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும். தெருவில் ரவுடித்தனம் செய்துகொண்டிருந்த அவருக்கு, ஒரு தெருவில் இருந்து மற்றொரு தெரு வரை எப்படி வீடு வந்தது. ரூ.200 கோடிக்கு சொத்துகள் எங்கிருந்து வந்தது?. அனைத்தும் தெரியும். அதனால், அந்த பெண்ணின் பெயரில் நற்பணி மன்றம் தொடங்கி, ஏழைகளுக்கு உதவிகள் செய்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்,’’ என காட்டமாக கூறினார்.

The post முன்னாள் அமைச்சர்கள் பட்டியலும் தயார் எடப்பாடியின் ரூ.45,000 கோடி ஊழலை வெளியிடுவோம்: ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Edipadi ,OPS ,Salem ,Bengaluru ,Phajendi ,Edapadi Palanisamy ,Trichy ,Edapadi ,Dinakaran ,
× RELATED சேலம் உட்கோட்டத்திலுள்ள ரயில்வே...