×

கொலை மிரட்டல், மோசடி வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளி ஜெர்மனுக்கு தப்ப முயன்றபோது கைது: தஞ்சை போலீஸ் சென்னை வருகை

சென்னை: கொலை மிரட்டல், மோசடி வழக்குகளில், தஞ்சாவூர் போலீசால் தேடப்பட்டவர், ஜெர்மன் தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ராம் ராஜகோபால் (34). இவர், மீது கடந்த பிப்ரவரி மாதம், தஞ்சாவூர் போலீஸ் நிலையத்தில் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உட்பட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையறிந்த, ஸ்ரீராம் ராஜகோபால் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, ஸ்ரீராம் ராஜகோபாலை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் எல்ஓசி யும் அனுப்பிவைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னையில் இருந்து ஜெர்மன் நாட்டின் பிராங்க்பார்ட் நகருக்கு செல்லும், லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், ஸ்ரீராம் ராஜகோபால் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல, சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அவரது ஆவணங்களை அதிகாரிகள் பரிசோதனை செய்தபோது, ஸ்ரீராம் ராஜகோபால் தஞ்சை போலீசாரால் தேடப்படும் நபர் என்ற தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஸ்ரீராம் ராஜகோபால் பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்துசெய்தனர். அதோடு அவரைப்பிடித்து குடியுரிமை அலுவலக அறையில் அடைத்துவைத்தனர். மேலும் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி, ஜெர்மனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார் என்ற தகவலை, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, குடியுரிமை அதிகாரிகள் அனுப்பினர். அங்கிருந்து தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்துக்கு நேற்று மதியம் வந்தனர். பின்னர் ஸ்ரீராம் ராஜகோபாலை கைதுசெய்து, பலத்த பாதுகாப்புடன், தஞ்சாவூர் கொண்டு சென்றனர்.

The post கொலை மிரட்டல், மோசடி வழக்குகளில் தொடர்புள்ள குற்றவாளி ஜெர்மனுக்கு தப்ப முயன்றபோது கைது: தஞ்சை போலீஸ் சென்னை வருகை appeared first on Dinakaran.

Tags : Germany ,Thanjavur ,Chennai ,Thanjavur police ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...