×

உத்தர பிரதேசத்தில் பதற்றம் முன்னாள் எம்.பி, சகோதரரை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது: 144 தடை உத்தரவு அமல்; இணைய சேவை முடக்கம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்.பி ஆதிக் அகமது அவரது சகோதரர் அஷ்ரப் அகமது துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பிரயாக்ராஜில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜை சேர்ந்த முன்னாள் எம்பி. மற்றும் பிரபல ரவுடியான ஆதிக் அகமது மீது கொலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கிடையே, கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ. ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி 24ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் ஆதிக் அகமது, அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்த சூழலில், ஆசாத், குலாமை ஜான்சியில் மாநில அதிரடிப்படை போலீசார் கடந்த 13ம் தேதி பிடிக்க முயன்றபோது நடந்த சண்டையில் சுட்டு கொல்லப்பட்டனர். கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உமேஷ் பால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அகமதாபாத் சிறையில் இருந்த ஆதிக் அகமது, அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் இரவு ஷாகஞ்ச் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது இருவரும், போலீஸ் முன்னிலையில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த போது, 3 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடலில் குண்டு பாய்ந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் காவலர் ஒருவருக்கும் பத்திரிகையாளர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் அவர்களை சுற்றி வளைத்த போது 3 பேரும் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டபடி ஆயுதங்களுடன் உடனடியாக சரணடைந்தனர். அவர்கள் லாவ்லேஷ் திவாரி (22), சன்னி (23), அருண் மவுர்யா (18) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்த போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் எதிரொலியாக, உ.பி.யின் அனைத்து மாவட்டங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், பிரயாக்ராஜில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட கொலையாளிகள் 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆதிக் அகமது, அஷ்ரப்பின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களது சொந்த ஊரில் நேற்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.

  • பிரபலமாக கொலை செய்தோம்
    போலீஸ் எப்ஐஆரில் கொலையாளிகள் மூவரும் ஏற்கனவே சிறு சிறு குற்றங்கள் செய்தவர்கள். குடும்பத்தை விட்டு தனியாக வசித்து வந்தவர்கள். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில்,“தாதாக்கள் மத்தியில் நாங்கள் பிரபலமாக வேண்டும் என்று கொலை செய்தோம். மூவரும் பத்திரிகையாளர்கள் வேடத்தில் வந்து சுட்டு கொன்றோம்’’ என்று தெரிவித்து உள்ளனர்.

*போலீஸ் மீது நடவடிக்கை இல்லை
ஆதிக் அகமது, அஷ்ரப்பை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனை அழைத்து வந்தபோதுதான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆதிக் அகமதுவின் உடலில் 8 குண்டுகள் பாய்ந்து இருந்தது. கொலையாளிகள் அடுத்தடுத்து சுட்டபோதும், கையில் இயந்திர துப்பாக்கி வைத்திருந்த போலீசார் அமைதியாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மீது உ.பி அரசு நேற்றிரவு வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

*சட்டத்துடன் விளையாடுவது சரியல்ல
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, “சட்டத்தின்படி குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அரசியல் நோக்கத்திற்காக சட்டத்துடன் விளையாடுவது ஜனநாயகத்திற்கு சரியானதல்ல. இந்த குற்றத்தை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அல்லது அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்று கூறியுள்ளார்.

  • பத்திரிகையாளர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்
    பத்திரிகையாளர் போர்வையில் வந்தவர்கள் ஆதிக் அகமதுவை சுட்டு கொன்றதை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா தலைமையில் பத்திரிகையாளர் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட இருப்பதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஐமு கூட்டணியை காப்பாற்றிய ஆதிக் ராஜேஷ் சிங் எழுதிய `இந்திய அரசியலின் பாகுபலிகள்: தோட்டாவில் இருந்து வாக்குச்சீட்டு வரை’’ என்ற நூலில்,கடந்த 2008ம் ஆண்டு மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது, அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து தந்த ஆதரவை விலக்கி கொண்டது. இதனால் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, அவரது அரசுக்கு தேவையான 44 வாக்குகளில் 6 வாக்குகள் 100க்கும் மேற்பட்ட நிலுவை வழக்குகளுடன் சிறையில் இருந்த ஆதிக் உள்பட 6 குற்றவாளிகளிடம் இருந்தது. அப்போது ஆதிக் சமாஜ்வாதி கட்சியின் அலகாபாத்தின் பல்பூர் மக்களவை தொகுதி எம்பியாக இருந்தார். அவர்கள் 6 பேரும் வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆதிக்கின் வாக்கு அன்று ஐ.மு. கூட்டணி மற்றும் அமெரிக்கா உடனான அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்தது,’’ என்று கூறப்பட்டுள்ளது.

  • ‘‘ஜெய் ஸ்ரீராம்’’ கோஷம் ஆதிக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவை சுட்டு கொன்ற பிறகு திவாரி, அருண், சன்னி ஆகிய மூவரும் `ஜெய் ராம் என்று கோஷமிட்டதாக போலீசார் தெரிவித்தனர். யோகி ராஜினாமா செய்ய வேண்டும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, “உபி.யில் 2017ம் ஆண்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு, சட்டத்தின் ஆட்சி அல்லாமல் துப்பாக்கி ஆட்சி நடந்து வருகிறது.

ஆதிக், அஷ்ரப் சுட்டு கொல்லப்பட்டது உ.பி.யில் பாஜ அரசின் தோல்வியை காட்டுகிறது. யோகி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து குழு அமைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும். இந்த குழுவில் உபி. அதிகாரிகள் யாரும் இடம் பெறக் கூடாது,’’ என்று கூறியுள்ளார்.

The post உத்தர பிரதேசத்தில் பதற்றம் முன்னாள் எம்.பி, சகோதரரை சுட்டுக் கொன்ற 3 பேர் கைது: 144 தடை உத்தரவு அமல்; இணைய சேவை முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,M. B ,Amal ,Lucknow ,Former ,Uttar Territories ,B Adhik Ahmed ,Ashraf Ahmed ,Dinakaran ,
× RELATED பிரபல கல்வி நிறுவனங்களின் நுழைவுத்...