×

பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு செண்பகவல்லியம்மன் கோயிலில் தெப்ப தேரோட்டம் கோலாகலம்

கோவில்பட்டி, ஏப்.16:கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு நாடார் உறவின்முறை சங்க மண்டகபடிதாரர் சார்பில் தெப்பத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு கடந்த 13ம்தேதி தேரோட்டமும், 14ம் தேதி தீர்த்தவாரி திருவிழாவும் நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்க மண்டகபடிதாரர் சார்பில் தெப்பத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

இதையொட்டி காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், தொடர்ந்து காலை 10.40 மணிக்கு கோயிலில் வைத்து யாகசாலை பூஜையும், அபிஷேகமும் நடந்தது. மாலை 6 மணிக்கு மேளதாளம் முழங்க சுவாமி, அம்பாள் வீதிஉலா புறப்பட்டு அடைக்கலம்காத்தான் மண்டபம் சென்றடைந்தது. அங்கிருந்து புறப்பட்டு தெப்பத்திற்கு வந்தடைந்ததும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 8.15 மணியளவில் தெப்பத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பம் 9 முறை வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தெப்ப திருவிழாவை முன்னிட்டு இரவில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் அடைக்கலகாத்தான் மண்டபம் அருகே இன்னிசை கச்சேரியும், நாடார் காமராஜ் மெட்ரிக்குலேசன் பள்ளியில் அன்னதானமும் நடந்தது.

நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம், சங்க துணைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் சுரேஷ்குமார், பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா சின்னமாடசாமி, தெப்ப தேர்த்திருவிழா கமிட்டி ஜோதிபாசு, பாலமுருகன், சந்திரசேகர், சண்முகசுந்தரம், வைத்தியலிங்கம், கணேஷ்ராஜன், ரவிச்சந்திரன், ஜெயபாலன், மாரியப்பன், மாணிக்கம் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு செண்பகவல்லியம்மன் கோயிலில் தெப்ப தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Panguni Perundruvizha ,Theppa Therotam Kolagalam ,Senpakavalliyamman Temple ,Kovilpatti ,Panguni Perundruvizha Theppa Chariot ,Sangha Mandakapatitar ,Kolakalam ,
× RELATED கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்...