×

இலக்கு நிர்ணயித்து மாணவர்கள் படிக்க வேண்டும் வேலூர் சரக டிஐஜி அறிவுரை போட்டி தேர்வுக்கு விழிப்புணர்வு முகாம்

வேலூர், ஏப். 16: இலக்கு நிர்ணயித்து மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வேலூர் முத்துரங்கம் அரசு கலை கல்லூரியில் நடந்த போட்டி தேர்வு விழிப்புணர்வு முகாமில் வேலூர் சரக டிஐஜி பேசினார். வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசின் வெற்றி தமிழா மற்றும் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி இணைந்து போட்டி தேர்வுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். இதில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கலந்து கொண்டு பேசியதாவது: நான் படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இன்று டிஐஜியாக இருப்பதற்கு காரணம் படிப்புதான். கல்வி கற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்து இருக்காவிட்டால் இன்று நான் உங்கள் முன் நின்றிருக்க மாட்டேன்.

கல்லூரி காலத்தில் நேரத்தை மாணவர்கள் வீணடிக்க கூடாது. கல்லூரி காலத்தில் நீங்கள் போடும் உழைப்புதான், அடுத்த கட்ட வாழ்க்கையை தீர்மானிக்கும். ஏழை குடும்பத்தில் பிறந்த நீங்கள் கல்வி மூலமாகத்தான் அடுத்த தலைமுறையின் நிலைமையை மாற்ற முடியும். கல்லூரியில் படிக்கும் 3 ஆண்டுகளில் கல்வியையும், தலைமை பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இலக்கு இல்லாத மனிதர் உயிருள்ள சடலத்தை போன்றவர். இலக்கை நிர்ணயித்து மாணவர்கள் படிக்க வேண்டும். ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக அனைவராலும் முடியாது. எனவே ஆசிரியர், போலீஸ், ராணுவம், தொழிலதிபர் போன்றவர்களாக மாற முயற்சி செய்யலாம்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து போட்டி தேர்வுகள் குறித்து இந்திய தோல் பொருட்கள் ஏற்றுமதி கழக செயல் இயக்குனர் செல்வம், திருவனந்தபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் பழனிச்சாமி, சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை உதவி இயக்குனர் செந்தில்குமார் ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். இதில் மாணவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இலக்கு நிர்ணயித்து மாணவர்கள் படிக்க வேண்டும் வேலூர் சரக டிஐஜி அறிவுரை போட்டி தேர்வுக்கு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Vellore Cargo ,DIG ,Vellore ,Vellore Muthurangam Government Arts College ,Vellore Saraga ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே பயங்கரம் இருளர்...