×

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் உடலுக்குள் வைத்த பஞ்சு அகற்றாததால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ராஜபாளையம், ஏப். 16: ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக குழந்தை பெற்ற பெண்ணின் உடலுக்குள் வைக்கப்பட்ட பஞ்சை அகற்றாமல், மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக நடந்து கொண்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கம்மாபட்டியை சேர்ந்தவர் தாமரை செல்வி(25) என்பவருக்கும், கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்துள்ளது. ‘ ஒரு மகன் இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக தாமரைச்செல்வி கருத்தரித்திருந்தார். இந்நிலையில் கடந்த 6ம் தேதி வியாழக்கிழமை மாலை தாமரை செல்விக்கு பிரசவ வலி ஏற்படவே அவர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சுக பிரசவத்தில் மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 3 தினங்களுக்கு பிறகு கடந்த ஞாயிற்றுக் கிழமை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

தாய் வீட்டுக்கு சென்ற தாமரைச் செல்விக்கு அளவுக்கு அதிகமாக ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக வலி அதிகமாகியதுடன், துர்நாற்றத்துடன் அடி வயிற்றில் காயங்கள் உருவாகி உள்ளது. இது குறித்து அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது, அவர்கள் பிரசவம் நடந்த மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். அதன் பேரில் நேற்று தாமரை செல்வி மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த போது, பிரசவம் நடந்த போது ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவதற்காக பிறப்புறுப்பின் வாய் பகுதியின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பஞ்சு அகற்றாமல் இருப்பது தெரிய வந்தது. பஞ்சில் ஊறிய ரத்தம் கெட்டுப்போய் உடலுக்கு பல்வேறு தொந்தரவுகளும், காயங்களும் ஏற்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் தவறு செய்த மருத்துவமனை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணின் உடலுக்குள் வைத்த பஞ்சு அகற்றாததால் பாதிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam Government Hospital ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...