×

காரைக்காலில் பரபரப்பு: ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர்

காரைக்கால்,ஏப்.16: காரைக்காலில் ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர் சந்திரபிரியங்காவிடம், அமைப்பு பிரதிநிதிகள் சரமாரியாக கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நலத்திட்டங்கள் தொடர்பாக எஸ்சிஎஸ்டி சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை மற்றும் ஆய்வு கூட்டம் காரைக்காலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தலைமையில் நடைபெற்றது.

மேலும் கூட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை துறை செயலாளர் கேசவன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், துணை இயக்குனர் மதன்குமார் மற்றும் எஸ்சிஎஸ்டி அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கூட்டம் 4 மணிக்கு நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். ஆனால் அமைச்சர் சந்திரபிரியங்கா சுமார் 2 மணி நேரம் தாமதமாக கூட்டத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருந்த அமைப்பு பிரதிநிதிகள் அமைச்சர் சந்திர பிரியங்காவை சூழ்ந்து கொண்டு தாமதம் குறித்து சரமாரியாக கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

மேலும் நாங்கள் எல்லாம் வயது முதிர்ந்தவர்கள் எங்களை இப்படி இரண்டு மணி நேரமாக காத்திருக்க வைப்பது என்ன நியதி என அமைப்பு பிரதிநிதிகள் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினர். கேள்விகளால் அதிர்ந்து போன அமைச்சர் சந்திர பிரியங்கா பிரதிநிதிகளிடம் தாமதமாக வந்ததற்கு விளக்கமளித்தார். இதையடுத்து அமைப்பு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து சங்க பிரதிநிதிகள் தலைவர்களுக்கு தங்கள் கருத்துக்களை கூற அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் பேசிய பிரதிநிதிகள் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர்கள் தங்கும் விடுதிகளை மேம்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு தரமான உணவு விடுதிகளில் வழங்க வேண்டும்.

மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். வீடு கட்டும் நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். தலித் கிராமங்களுக்கு சிமென்ட் சாலை, விளையாட்டு பூங்கா, நூலகம் ஆகியவை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலிறுத்தினர். சிறப்பு நிதியை எஸ்சிஎஸ்டி மக்களுக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும். காரைக்கால் பகுதியில் வாழ்கின்ற பழங்குடியினர், காட்டுநாயக்கன், மலைகுறைவன் இன மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் சான்று வழங்குவதில் தாலுகா அலுவலகம் காலதாமதம் படுத்துவதாக புகார் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காரைக்கால் கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், சங்க பிரதிநிதிகள் கோரிக்கை வைத்த அனைத்து கோரிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றார். இறுதியில் போக்குவரத்து மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 91% சதவீதம் செலவழிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9% சதவீத நிதி மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்டு அவை செலவிட முடியாமல் இருந்தது. இது வருங்காலங்களில் சரி செய்யப்படும். 21 துறைகளுக்கு சமுதாய மக்களுக்கு செலவிட துறையின் நிதியிலிருந்து பணம் ஒதுக்குவதாகவும் இந்த ஆண்டு முதல் இவை கண்காணிக்கப்படும் என்றார்.

The post காரைக்காலில் பரபரப்பு: ஆதிதிராவிடர் நலத்துறை கூட்டத்திற்கு தாமதமாக வந்த அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Adi Dravida ,Minister ,Chandrapriyanka ,Adi Dravidar Welfare Department ,
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...