×

கீரப்பாக்கத்தில் 4வது சம்பவம் கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு: நண்பர்களிடம் விசாரணை

சென்னை: கீரப்பாக்கம் கல்குவாரி குட்டையில் குளித்தப்போது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். இதுதொடர்பாக, அவரது நண்பர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பட்டாபிராம், பாரதியார் நகர், மருதம் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் கார்த்திகேயன் (21). இவர், டிப்ளமோ படித்து முடித்துவிட்டு, வேலை தேடி வந்தார். இந்நிலையில், சித்திரை திருநாளையொட்டி, நேற்று முன்தினம் வீட்டிற்கு தெரியாமல் கார்த்திகேயன் தனது நண்பர்கள் 4 பேருடன் கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் கல்குவாரி பகுதிக்கு வந்துள்ளார். அங்கு, 300 அடி ஆழம் கொண்ட குட்டையில் மாலை 4 மணியளவில் குளித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது, நீச்சல் தெரியாத கார்த்திகேயன் ஆழமான பகுதிக்கு சென்றபோது, நீரில் மூழ்கினார். இதை பார்த்து அவரது நண்பர்கள் அலறி கூச்சலிட்டுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து, தண்ணீரில் மூழ்கி அவரை தேடியும் கிடைக்கவில்லை. தகவலறிந்த காயார் போலீசார் மற்றும் மறைமலைநகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ரப்பர் படகு மூலம் நீண்ட நேரம் தேடினர். ஆனால், இரவு வரை கிடைக்காததால், திரும்பி சென்றனர். மீண்டும் நேற்று காலை மறைமலைநகர் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராகவன் தலைமையில் 8 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரமாக தேடினர். ஆனாலும் உடல் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சென்னை மெரினா கடற்கரை காவல் நிலையத்தில் உள்ள 9 பேர் கொண்ட (ஸ்கூபா) நீர்மூழ்கி வீரர்கள் வந்து 300 அடி ஆழம் கொண்ட தண்ணீரில் அரை மணி நேரம் தேடி, காலை 11.30 மணிக்கு கார்த்திகேயனின் சடலத்தை மீட்டனர். இதனை அடுத்து கார்த்திகேயன் சடலத்தை கைப்பற்றிய காயார் போலீசார் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காயார் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திகேயன் நண்பர்களான மோகன், வருண், அகத்தீஸ்வரன், விக்னேஷ் ஆகிய 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • தடை விதிக்க வேண்டும்
    கீரப்பாக்கம் கல்குவாரியை சுற்றி பல சட்டவிரோத செயல்கள் மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக அனைத்து கல்குவாரிகளையும் தடை செய்யப்பட்ட பகுதி என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். மேலும், கல்குவாரிகளுக்கு நிரந்தரமாக செல்லாத வகையில் நுழைவு பகுதிகளில் ராட்சத பள்ளங்களை தோண்ட வேண்டும் அல்லது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
  • டென்ட் அடித்து உல்லாசம்
    கீரப்பாக்கம் கல்குவாரிகளில் உள்ள தண்ணீரில் குளிப்பதற்காக தினம்தோறும் ஜோடி, ஜோடியாக படையெடுத்து வரும் மாணவ, மாணவிகள் கல்குவாரிகளை சுற்றியுள்ள பாழடைந்த கட்டிடங்கள், அடர்த்தியாக உள்ள காடுகளில் தஞ்சமடைகின்றனர். அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அப்பகுதிகளில் டென்ட் அடித்து மதுபானம், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை அருந்திவிட்டு உல்லாசமாக இருந்து வருகின்றனர். சிலர், போதையில் கல்குவாரி குட்டையில் குளித்து கும்மாளம் போடுகின்றனர். அப்போது இதுபோன்று நீச்சல் தெரியாதவர்கள் தண்ணீரில் மூழ்கி இறக்க வேண்டிய அவலநிலை உள்ளது. தற்போது 4வது முறை இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

The post கீரப்பாக்கத்தில் 4வது சம்பவம் கல்குவாரி குட்டையில் மூழ்கி கல்லூரி மாணவன் உயிரிழப்பு: நண்பர்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Keerpakkam College ,Kalquari pond ,Chennai ,Keerappakkam Kalquari pond ,Keerpakkam ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...