×

தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் வார விடுமுறை: தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவரிடம் கோரிக்கை

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவர் மா.வெங்கடேசன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதில், தாம்பரம் மாநகராட்சியில், பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பரப்புரையாளர்கள், டிபிசி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் சம்பளம் வழங்கிட வேண்டும்.

அனைத்து தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். பணி உபகரணங்கள், சீருடை மழைக்கோட்டு, கையுறை, காலணி, சோப் ஆகியவற்றை தவறாமல் வழங்கிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு உடை மாற்றும் அறை, கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். சுழற்சி முறையில் சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும். தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் இதரப்பணியாளர்களுக்கு கருணை தொகையாக ரூ.3000 உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணிப்பதிவேடு பராமரிப்பு செய்து, அவரது விபரம் அவரது குடும்ப விபரம் பதிவு செய்து பராமரிக்கப்பட வேண்டும்.

வருடத்திற்கு ஒருமுறை தொழிலாளியின் ஒப்புதல் பெற்று பணிப்பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் இதரப்பணியாளர்கள் வருங்கால வைப்புநிதி மற்றும் மருத்துவ ஈட்டு தொகை ஆகியவற்றை முறையாக பணியாளர்கள் கணக்கில் செலுத்த வேண்டும். அதற்கான ரசீது அல்லது பிஎப் மற்றும் இஎஸ்ஐ கணக்கு எண் பணியாளருக்கு வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி நிர்வாகம் முதன்மை முதலாளி, தொழிலாளர்களுக்கு வழங்கிடும் பங்களிப்பு தொகை உடன் செலுத்தப்படுகிறதா எனும் விபரத்தை தொழிலாளிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் செங்கல்பட்டு ஆட்சியர் தனது செயல்முறை ஆணை மூலம் பல்வகை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளார். எனவே, அவர் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கிட உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணப்பயன்கள் விரைந்து பட்டுவாடா செய்யப்பட வேண்டும். காலஞ்சென்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும்.

மாநகராட்சியில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்கள் சரண்டர் மற்றும் நிலுயிைல் உள்ள அகவிலைப்படி தொகையினை கணக்கிட்டு உடன் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும்.’’ என கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் அழகுமீனா ஐஏஎஸ், தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜ தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post தாம்பரம் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் வார விடுமுறை: தேசிய தூய்மை பணியாளர் மறுவாழ்வு ஆணையத் தலைவரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,National Sanitation Workers Rehabilitation Commission ,Tambaram ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...