×

சி.ஆர்.பி.எப்., தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதும் உரிமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று தந்துள்ளார்: திமுக இளைஞர், மாணவர் அணி நன்றி

சென்னை: திமுக இளைஞர் அணிச் செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ. ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பு: சி.ஆர்.பி.எப். பணியிடத்திற்கான கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடைபெறும் என்று அறிவித்ததை மாற்றி, தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளில் தேர்வினை நடத்த வேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். அவரவர் தாய் மொழியில் கல்வி கற்கவும், தேர்வுகள் எழுதவும் வாய்ப்புகள் வழங்குவது என்பதே நீதியாகும். ஆனால், ஒன்றிய பாஜ அரசு தொடர்ந்து இந்தியை மட்டுமே உயர்த்தி பிடித்து, பிற மொழிகளை தாழ்த்தி கொண்டிருப்பதை நாடறியும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், திமுக இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து வரும் 17ம் தேதி, சென்னை சாஸ்திரி பவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தலைவர்- முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். தேர்வினை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவித்திருப்பது தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கும் மகிழ்ச்சிக்கரமான நம்பிக்கைக்குரிய ஒரு செய்தியாகும்.

தன்னுடைய ஆளுமையின் காரணமாய் போராட்டமின்றி சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதும் உரிமையினை பெற்று தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, திமுக இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் காலங்களில், ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துத் துறை தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளில் நடத்திட வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதை செயலாக்கம் பெறுகிற வரையில், திமுக இளைஞர் அணி-மாணவர் அணி அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என உறுதி ஏற்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சி.ஆர்.பி.எப்., தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதும் உரிமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெற்று தந்துள்ளார்: திமுக இளைஞர், மாணவர் அணி நன்றி appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,DMK ,Chennai ,DMK Youth League ,Minister ,Udayanidhi Stalin ,Student League ,CVMP ,Ezhilarasan ,MLA ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...