×

சிந்து வெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒடிசா முதல்வரின் முதன்மை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய, ‘ஒரு பண்பாட்டின் பயணம் – சிந்து முதல் வைகை வரை நூலினை வெளியிட்டு பேசியதாவது: சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது என்றால் அங்கு வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் பேசிய மொழி என்ன? என்ற கேள்விக்கான விடைகளை ஆய்ந்து சொல்கிறார். அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ்வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்கள் என்பதை நிறுவி இருக்கிறார். சிந்துப் பரப்பில் திராவிடக் கருதுகோள் தான் முதன்மையானது என்கிறார்.

சிந்துப் பண்பாடு பரவியிருந்த இடங்கள் என்பது குஜராத், மகாராஷ்டிரம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகியவை உள்ளடக்கிய பகுதிகள் இந்தப் பகுதிகளில் எத்தனை தமிழ்ச் சொற்கள் இப்போதும் வழங்கப்படுகிறது என்பதைச் சொல்வதுதான் இவரது ஆய்வு கொற்கை – வஞ்சி – தொண்டி ஆகிய தமிழ்ப் பெயர்கள் பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் இருக்கிறது. மொகஞ்சதரோவில் இருந்த திமில் கொண்ட காளை தான், அலங்காநல்லூரில் துள்ளிக் குதிக்கிறது. எனவே சிந்துவெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு என்பது இவரது ஆய்வினுடைய முடிவு. சங்ககால வாழ்வியல் – நகர்மய வாழ்வியல் என்பது கற்பனையானது அல்ல.

அதற்கான சான்றுகள் பூமிக்கடியில் உள்ளன என்பதை திராவிட மாடல் அரசானது மெய்ப்பித்து வருகிறது. இந்திய வரலாற்றை கங்கை சமவெளியில் தொடங்குகிறீர்கள். அதனை காவிரி, வைகையில் தான் தொடங்க வேண்டும்” என்று வின்சென்ட் ஸ்மித் என்ற வரலாற்று ஆசிரியரிடம் சுந்தரம்பிள்ளை சொன்னதாக சொல்கிறார். அதற்கு வின்சென்ட் ஸ்மித், ‘இப்போது அதை நடைமுறையில் பின்பற்ற முடியாது. ஆதிகால திராவிட சமூக அமைப்புகள் பற்றி கிடைக்கும் தரவுகள் ஆராயப்படவில்லை’ என்று சொல்லி இருக்கிறார். இத்தகைய பதிலை இப்போது யாரும் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் கொடுப்பதற்கு பாலகிருஷ்ணனின் இந்த புத்தகம் ஒன்றே போதும்.

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்று சொல்லி வருகிறேன். இதுதான் இந்த திராவிட மாடல் அரசினுடைய நோக்கம். அந்த நோக்கத்துக்கு துணையாக ஆய்வுத் தூணாக இந்த நூல் அமைந்திருக்கிறது. தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே – என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அது போல துறைதோறும் தனது தொண்டை பாலகிருஷ்ணன் ஆற்ற வேண்டும். அவருக்கு உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post சிந்து வெளிப் பண்பாட்டுக்கு சொந்தம் கொண்டாடும் தகுதி தமிழுக்கே உண்டு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamils ,Sindh ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M. K. Stalin ,Indus Valley ,Tamil ,Nadu ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!