×

அரை சதம் விளாசினார் கோஹ்லி; ஆர்சிபி அணிக்கு 2வது வெற்றி: டெல்லிக்கு தொடர்ச்சியாக 5வது தோல்வி

பெங்களூரு: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 23 ரன் வித்தியாசத்தில் வென்றது.
எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில் (பகல்/இரவு) டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். விராத் கோஹ்லி, கேப்டன் டு பிளெஸ்சி இருவரும் இணைந்து ஆர்சிபி இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது. டு பிளெஸ்ஸி 22 ரன் (16 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார்.

அடுத்து கோஹ்லி – லோம்ரர் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்தனர். கோஹ்லி 50 ரன் (34 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி லலித் யாதவ் பந்துவீச்சில் யஷ் துல் வசம் பிடிபட்டார். லோம்ரர் 26 ரன் எடுத்து (18 பந்து, 2 சிக்சர்) பெவிலியன் திரும்பினார். ஹர்ஷல் படேல் 6, மேக்ஸ்வெல் 24 ரன் (14 பந்து, 3 சிக்சர்), தினேஷ் கார்த்திக் (0) ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, ஆர்சிபி 13.5 ஓவரில் 132/3 என்ற நிலையில் இருந்து 14.2 ஓவரில் 132/6 என திடீர் சரிவை சந்தித்தது.

கடைசி கட்டத்தில் ஷாபாஸ் அகமது – அனுஜ் ராவத் இணைந்து பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. ஷாபாஸ் 20 ரன், அனுஜ் 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் தலா 2, அக்சர் படேல், லலித் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற சற்றே கடினமான இலக்குடன் டெல்லி கேப்பிடல்ஸ் களமிறங்கியது. கேப்டன் வார்னர், பிரித்வி ஷா இணைந்து துரத்தலை தொடங்கினர்.

பிரித்வி ஒரு ரன் கூட எடுக்காமல் ரன் அவுட்டாகி வெளியேற, மிட்செல் மார்ஷ் (0), யஷ் துல் (1) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். டெல்லி 2.2 ஓவரில் 2 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து அதிர்ச்சி தொடக்கத்தை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே வார்னர் (19 ரன்), போரெல் (5 ரன்) விக்கெட்டை பறிகொடுக்க, கேப்பிடல்ஸ் 53/5 என தடுமாறியது. கடுமையாகப் போராடிய அக்சர் படேல் 21 ரன், மணிஷ் பாண்டே 50 ரன் (38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, லலித் யாதவ் 4, அமான் ஹகிம் கான் 18 ரன்னில் அவுட்டாகினர்.

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன் மட்டுமே எடுத்து 23 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 5வது தோல்வியை சந்தித்தது. அன்ரிச் நோர்க்யா 23 ரன் (14 பந்து, 4 பவுண்டரி), குல்தீப் யாதவ் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆர்சிபி பந்துவீச்சில் விஜய்குமார் வைஷாக் 4 ஓவரில் 20 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். சிராஜ் 2, பார்னெல், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆர்சிபி 4 போட்டியில் 2வது வெற்றியை பதிவு செய்தது. அரை சதம் விளாசியதுடன், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 3 கேட்ச் பிடித்த கோஹ்லி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post அரை சதம் விளாசினார் கோஹ்லி; ஆர்சிபி அணிக்கு 2வது வெற்றி: டெல்லிக்கு தொடர்ச்சியாக 5வது தோல்வி appeared first on Dinakaran.

Tags : Kohli ,RCB ,Delhi ,Bengaluru ,IPL league ,Delhi Capitals ,Royal Challengers Bangalore ,Dinakaran ,
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...