×

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது

சென்னை: ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே ரயில் மறிக்கும் போராட்டம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது. இதில், மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவல்ல பிரசாத், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், ரஞ்சன் குமார், முத்தழகன், டில்லிபாபு, அடையாறு துரை, மாநில செயலாளர்கள் தளபதி பாஸ்கர், சிரஞ்சீவி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சுமதி அன்பரசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காங்கிரசார் ரயில் மறியல் செய்ய எழும்பூர் ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து ரயில் நிலையத்துக்கு வெளியிலேயே நிறுத்தினர். இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டன உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் சிவராமன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்: இதற்கிடையில் கே.எஸ்.அழகிரி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘நான், நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.16,000 வாடகைக்கு குடியிருக்கிறேன். ஒரு ஆண்டாக வாடகை கட்டவில்லை என்று நோட்டீஸ் பெறுகிற நிலையில் இருக்கிறேன். 4 ஆடுகளை மட்டுமே வைத்திருந்ததாக கூறிய பாஜ தலைவர் அண்ணாமலை மாதம் ஒன்றுக்கு மூன்றே முக்கால் லட்சம் வீட்டு வாடகை எப்படி கொடுக்க முடிகிறது. 3 லட்ச ரூபாய் கை கடிகாரமும் எப்படி அணிய முடிகிறது, இதற்கு யார் பணம் கொடுக்கிறார்கள். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என கூறியுள்ளார்.

The post ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் ரயில் மறியல் போராட்டம்: ஆயிரக்கணக்கான காங்கிரசார் கைது appeared first on Dinakaran.

Tags : Congress ,Tamil Nadu ,Rahul Gandhi ,Chennai ,
× RELATED சொல்லிட்டாங்க…