×

கடந்த 5 ஆண்டு காலகட்டத்தில் கர்நாடக பாஜ அமைச்சர்கள் சொத்து 8 மடங்கு அதிகரிப்பு

பெங்களூரு: கர்நாடக பாஜ அமைச்சர்களின் சொத்து மதிப்பு 8 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜவை சேர்ந்த தற்போதைய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் சிலரும் போட்டியிடுகின்றனர். இவர்கள் தங்கள் தொகுதியில் தேர்தல் அதிகாரியை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது வேட்புமனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களை முந்தைய தேர்தலின் போது அவர்கள் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பாஜ அமைச்சர்கள் சொத்து மதிப்பு 3 சதவீதம் முதல் 8 சதவீதம் வரை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர், மின்துறை அமைச்சர் சுனில்குமார், பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல், மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் மற்றும் தொழில்துறை அமைச்சர் முருகேஷ் நிராணி ஆகியோரின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. 2019ம் ஆண்டு காங்கிரசில் இருந்து ஆபரேஷன் கமலா மூலம் பாஜவுக்கு தாவிய 17 எம்எல்ஏக்களில் ஒருவரான சுதாகரின் அசையும் சொத்துகள் 2018ம் ஆண்டு ரூ.1.11 கோடியிலிருந்து 2023ல் ரூ.2.79 கோடியாக உயர்ந்துள்ளது. அமைச்சர் சுதாகரின் மனைவி டாக்டர் பிரீத்தியின் அசையா சொத்து மதிப்பு 2018ம் ஆண்டு ரூ.1.17 கோடியிலிருந்து 2023ல் ரூ.16.1 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரு சதாசிவநகரில் ரூ.14.92 கோடி மதிப்புள்ள வீட்டை வாங்கியதும் இதில் அடங்கும்.

மேலும் காங்கிரசில் இருந்து 2019ம் ஆண்டு பாஜவுக்கு தாவிய அமைச்சர் எஸ்.டி.சோமசேகரின் சொத்து 2018ம் ஆண்டு ரூ.67.83 லட்சத்தில் இருந்து ரூ.5.46 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் கர்நாடக மின்துறை அமைச்சர் சுனில் குமாரின் அசையும் சொத்துகள் 2018ம் ஆண்டு தேர்தலின் போது 53.27 லட்சமாக இருந்தது. 2023ம் ஆண்டு தற்ேபாதைய தேர்தலின் போது ரூ.1.59 கோடியாக மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. அதே காலகட்டத்தில் அவரது அசையா சொத்து மதிப்பு ரூ.1.68 கோடியிலிருந்து ரூ.4.03 கோடியாக இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், தொழில் துறை அமைச்சர் முருகேஷ் நிராணியின் அசையும் சொத்து மதிப்பு ரூ.16 கோடியில் இருந்து ரூ.27.22 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ.4.58 கோடியில் இருந்து ரூ.8.6 கோடியாகவும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது.

இவரது மனைவி கமலா நிராணிக்கு 2018ல் அசையும் சொத்துகள் ரூ.11.58 கோடியிலிருந்து ரூ.38.35 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலின் அசையும் சொத்துகள் 2018ல் ரூ.94.36 லட்சத்தில் இருந்து ரூ.3.28 கோடியாக கடந்த 5 ஆண்டில் உயர்ந்துள்ளது. இவரது அசையா சொத்து மதிப்பு ரூ.4.47 கோடியில் இருந்து ரூ.7.2 கோடியாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • கர்நாடக மின்துறை அமைச்சர் சுனில்குமாரின் சொத்து மதிப்பு ரூ.53.27 லட்சத்தில் இருந்து தற்போது ரூ.1.59 கோடியாக உயர்ந்துள்ளது.

*: சுகாதார துறை அமைச்சர் சுதாகரின் மனைவியின் சொத்து மதிப்பு, ரூ.1.17 கோடியில் இருந்து 2023ல் ரூ.16.1 கோடியாக அதிகரித்துள்ளது.

The post கடந்த 5 ஆண்டு காலகட்டத்தில் கர்நாடக பாஜ அமைச்சர்கள் சொத்து 8 மடங்கு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka Baja ,Bangalore ,Karnataka Assembly Elections Bajava ,Dinakaran ,
× RELATED பெங்களூரு விமான நிலைய நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்!!