×

அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது: முன்பதிவு நாளை தொடக்கம் என அறிவிப்பு

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், கடல் மட்டத்தில் இருந்து, பல ஆயிரம் அடி உயரத்தில் அமர்நாத் பனி குகை கோயில் அமைந்துள்ளது. இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சிவ பக்தர்களால் யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த பனி குகை கோயிலுக்கு, மிக குறுகிய பாதை வழியாகவே செல்ல முடியும்.

இதில் நடைபயணமாக அல்லது குதிரை மூலமாகவோ செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மட்டுமே யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த கோயிலுக்கு செல்ல, தற்போது 2 பாதைகள் உள்ளன. பகல்ஹாமில் இருந்து, நடைபயணம் அல்லது பல்டாலில் இருந்து மலையேற்றம் வாயிலாக இந்த கோயிலை அடைய முடியும். இதில், பல்டால் பாதை மிகவும் கடினமானதாகும். இந்நிலையில், யாத்ரீகர்களின் வசதிக்காக, பகல்ஹாம் பாதையில், சந்தன்வாடி – சங்கம் இடையே புதிய சாலை அமைக்க ஒன்றிய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில், சுரங்கப்பாதையும் அமைய உள்ளது. இதற்கு, சில மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்பின், 5 ஆண்டுகளில் சாலை பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாலை அமைந்தால், அமர்நாத்துக்கு மிகவும் விரைவாக பயணம் செய்ய முடியும். கடும் மழை உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் இருந்து பக்தர்களை காப்பாற்ற முடியும். மேலும், லடாக்கில் இருந்து ஜம்மு செல்வதற்கு, இனி ஸ்ரீநகர் வழியாக பயணிக்க தேவையிருக்காது. இந்நிலையில், இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்குவது குறித்து அமர்நாத் கோயில் வாரிய குழு ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையிலான குழு விவாதித்தது. இதில் அமர்நாத் புனித யாத்திரை வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 17ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது: முன்பதிவு நாளை தொடக்கம் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Holy ,Amarnath ,Srinagar ,Anantnak district ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED பிரகாசபுரம் ஆலயத்தில் விபிஎஸ் வகுப்புகள் நிறைவு