×

அண்ணாமலை மிரட்டல் எதிரொலி: அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி.! கூட்டணியில் இருந்து வெளியேற எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் தலைவர்கள்

சென்னை: அதிமுக தலைவர்களின் ஊழல் மற்றும் சொத்துப் பட்டியலை வெளியிடப்போவதாக அண்ணாமலை மிரட்டியிருப்பதற்கு, அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எவ்வளவுதான்அவர்கள் செய்யும் அசிங்க செயலை தாங்கிக் கொண்டிருப்பது. கூட்டணியில் இருந்து பாஜகவை கழட்டி விட வேண்டும் என்று அவர்கள் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளனர். இது அதிமுக கூட்டணியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள். ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் யார் பெரியவர்கள் என்ற மோதல் இருந்து வருகிறது. இருவரில் யார் பின்னால் தங்கள் சமூக மக்கள் இருக்கிறார்கள் என்ற போட்டியும் அவர்களுக்குள் உள்ளது. இந்த மோதல், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் வெட்ட வெளிச்சமானது. அண்ணாமலை பிரசாரம் சென்றபோது அவருக்கு ஆதரவாக அதிமுகவினர் செல்லவில்லை. கூட்டத்தையும் கூட்டவில்லை. இதனால் அண்ணாமலை பிரசாரத்துக்கு பல மணி நேரம் தாமதமாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

வேண்டா வெறுப்பாக, அழையா விருந்தாளியாக சென்று பிரசாரம் செய்தார். பாஜகவினரை யார் பிரச்சாரத்துக்கு அழைத்தது என்று அவர்கள் காதுபடவே கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் வேறு வழியில்லாமல் பாஜகவினர் தனியாக பிரசாரம் செய்து வந்தனர். இந்தநிலையில் அதிமுகவை மொத்தமாக அழிக்க அண்ணாமலை திட்டமிட்டிருந்த தகவல் எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்தது. இதனால் பாஜகவில் உள்ள பலரையும் தனது கட்சியில் இணைக்க முடிவு செய்த எடப்பாடி பழனிச்சாமி, அதற்கான வேலைகளை தீவிரப்படுத்தினார். அதன்படி தகவல் தொழில் நுட்பப் பிரிவு உள்ள பலரையும் பாஜகவில் இருந்து இழுத்து தனது கட்சியில் சேர்த்தார். இதனால் டென்ஷன் ஆன அண்ணாமலை, நேரடியாக எடப்பாடியை மிரட்டத் தொடங்கினார். நாங்களும் அதிமுகவினரை இழுப்போம் என்றார். இந்தநிலையில்தான் பாஜகவினர் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையில் தனிக் கூட்டணி வேண்டும். அதிமுக கூட்டணியில் போட்டியிடச் சொன்னால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று மிரட்டத் தொடங்கிவிட்டார். இது தெரிந்ததும் அமித்ஷா, அண்ணாமலையை கூப்பிட்டு கண்டித்தார்.

இந்தநிலையில், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது பேச்சுக்களை இந்தியில் மொழி பெயர்த்து, தம்பித்துரை மூலம் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிச்சாமி புகாராக வழங்கினார். இது அண்ணாமலைக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் டெல்லியில் அமித்ஷா பேசும்போது, தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று கூறியதாக தகவல் வெளியானது. இதை அண்ணாமலை மறுத்தார். அவர் அப்படி சொல்லவில்லை. அது தண்ணீரில் எழுதப்பட்ட சொல் என்றார். இதனால் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்பதில் அண்ணாமலை உறுதியாக இருப்பது தெரியவந்தது. சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை அதிமுகவினர் ஊழல் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும் என்று எச்சரித்திருந்தார். இது கூட்டணியில் உள்ளவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி விசாரித்தபோது எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, டாக்டர் விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 15 மாஜி அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை அவர் தயாரித்துள்ளார்.

அதில் அவர்கள் கட்சியில் சேருவதற்கு முன்னர் எவ்வளவு சொத்து வைத்திருந்தனர். தற்போது எவ்வளவு வைத்துள்ளனர் என்ற விவரங்களை அவர் சேகரித்துள்ளார். அதோடு ஊழல் பட்டியல்களையும் சேகரித்துள்ளார் என்று தெரியவந்தது. இதை கேள்விப்பட்டதும், எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அதேநேரத்தில் அண்ணாமலை நேரடியாக அதிமுகவை மிரட்டத் தொடங்கிவிட்டார். இதற்கு பின்னரும் அந்தக் கூட்டணியில் இருப்பது நியாயம் இல்லை. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என்று அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்கள் எடப்பாடியை வலியுறுத்தத் தொடங்கி விட்டனர். இந்தநிலையில், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சிலர் மீது குற்றச்சாட்டுக்களை வெளியிட்டுள்ளார். அவர் பாஜக தலைவராக இருந்து இந்த பட்டியலை வெளியிட்டாரா அல்லது தனிப்பட்ட முறையில் வெளியிட்டாரா என தெரிந்து கொள்ள விரும்புகிறேன். பாஜக சார்பில் வெளியிட்டிருந்தால் குறைந்தபட்சம் அவர்கள் ஆட்சியில் உள்ள மாநிலத்தை தவிர எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மாநிலங்களான ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் ஆகிய மாநில பாஜக தலைவர்களும், ஆளுங்கட்சியினரின் ஊழல் பட்டியலை வெளியிட இருக்கிறார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் பட்டியலை வெளியிட்டாரா அல்லது பாஜகவின் மாநில தலைவர் என்ற முறையில் வெளியிட்டாரா என்பது தெரிந்தால் அதற்கு ஏற்றவாறு அதிமுகவின் பதில் இருக்கும், என்றார். உலகிலேயே இவர் தான் நாட்டுக்காகவே உழைக்க பிறந்தவர் போல் நடந்து கொள்கிறார். இந்த நாட்டுக்காக உழைத்த தலைவர்கள், அரசியல்வாதிகள், மக்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். கட்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தங்களை நாட்டிற்காக அர்ப்பணித்துக்கொண்டவர்கள் ஏராளமானோர் உள்ளனர். எனவே இது குறித்து கருத்துக்கூற ஒன்றும் இல்லை. கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் நிலைபாடு குறித்து நாளை நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில், மூத்த நிர்வாகிகளுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கட்சியின் நிலைப்பாட்டை அறிவிப்பார் என்றார். அதிமுக தலைவர்களும் தற்போது அண்ணாமலை மீது நேரடியாக குற்றச்சாட்டுக்களை கூறத் தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

The post அண்ணாமலை மிரட்டல் எதிரொலி: அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சி.! கூட்டணியில் இருந்து வெளியேற எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் தலைவர்கள் appeared first on Dinakaran.

Tags : Edapadi ,Chennai ,Anamalai ,Edapati ,
× RELATED அதிமுகவை உடைக்கும் முயற்சி ஒருபோதும் நடக்காது: எடப்பாடி பழனிசாமி பேச்சு