×

இஷ்டங்களை பூர்த்தி செய்யும் அஷ்ட லட்சுமிகள்!

நம் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவிதமான வளங்களையும் வழங்கக்கூடிய திருமகளை எட்டுவித செல்வங்களுக்கு அதிபதியாக, எட்டு தெய்வீக வடிவங்களில், அஷ்டலட்சுமியாக வழிபடுவது நம்முடைய மரபு. செல்வங்களை அள்ளி அருளும் எட்டு லட்சுமிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. ஆதிலட்சுமி

பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியவள். என்றும் நிலைத்திருப்பவள் என்பதனை குறிப்பவள். ஆதி என்பதற்கு ‘முதல்’ என்று பொருள். திருப்பாற்கடலைத் தேவர்களும் அசுரர்களும் கடைந்தபோது முதலில் நஞ்சு வந்தது. பின் காமதேனு, சந்திரன் வந்தார்கள். அப்போது தோன்றிய முதல் லட்சுமியே ஆதி லட்சுமி. ஒவ்வொரு லட்சுமிக்கும், பெயரைப் பொறுத்து ஒவ்வொரு குணம் உண்டு. ஆனால் ஆதிலட்சுமியின் திருப்பாதத்திற்குக் கீழ் பூர்ணகும்பம், கண்ணாடி, சாமரம், கொடி, பேரிகை, விளக்கு, ஸ்வஸ்திகம் போன்ற அபூர்வ மங்கள அம்சங்கள் அமையப் பெற்றிருக்கும். அவள் பொற்பாதங்கள் பற்றியவர்களுக்கு மங்களம் சிறக்கும். இவளை துதித்து வணங்கி வர எக்காரியமும் தடை, தாமதம் இல்லாமல் நிச்சயமாக முழு வெற்றியுடன் நடக்கும்.

  1. சந்தானலட்சுமி

சந்தானம் என்றால் மழலைச் செல்வம் என்று பொருள். ஒரு வம்சம் தழைத்து வளர மழலைச் செல்வம் இன்றியமையாதது. செல்வத்தில் சிறந்தது குழந்தைச் செல்வம். அத்தகைய மழலைச் செல்வத்தை வழங்குபவள், சந்தானலட்சுமி. ஆறு திருக்கரங்களுடன் பின்னல் தலையுடன், கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களைத் தரித்து, குழந்தையை மடியில் இருத்தி அருள்பாலிப்பவள். இவளது பீடத்தில் சாமரம் வீசியவாறும், விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் இரு கன்னிப் பெண்கள் நின்று கொண்டிருப்பார்கள். இவளை மனதார வழிபட குழந்தைச் செல்வத்தை தடையின்றியும் அளித்து ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி அருள்புரிவாள்.

  1. கஜலட்சுமி

ராஜலட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் கருணையினாலே இந்திரன் கடலுக்கு அடியில் இருந்த இந்திரலோகத்தைத் திரும்பப் பெற்றான். ‘கஜம்’ என்றால் யானை. இருபுறமும் யானைகள் கலசம் ஏந்தித் திருமஞ்சனம் செய்வதுபோல் அமர்ந்திருப்பதால் கஜலட்சுமி என்று பெயர். கஜலட்சுமியை ராஜலட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி எனவும் அழைப்பர். கஜலட்சுமியின் உருவத்தை வீட்டு நிலை வாசற்படியில் வைத்தால் வீடு சுபிட்சம் பெருகும். கஜலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் எல்லாவித ஐஸ்வர்யங்களையும் பெற்று, ஆனந்தமாக வாழலாம்.

  1. தனலட்சுமி

தனம் என்பது பணம் அல்லது தங்கத்தைக் குறிக்கும். பணம் நாம் சுக வாழ்வு வாழ மிகவும் அவசியம். இத்தேவியே வைபவ லட்சுமி என்றும் அழைக்கப்படுகிறாள். தனலட்சுமியின் அருளால் செல்வங்கள் குவியும். தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், பச்சிலை, கெண்டி, வில், அம்பு போன்றவற்றை ஏந்தி பத்மபீடத்தில் காட்சி தருபவள். இவளை வழிபட தர்ம நெறியில் நம் தேவைக்கேற்ப செல்வத்தை அளித்து வளத்துடன் வாழ ஸ்ரீதனலட்சுமி அருள்புரிவாள்,

  1. தான்யலட்சுமி

தானிய வளங்களை அருள்பவள் தான்யலட்சுமி. தானிய வகைகள், உணவுப் பொருட்கள், பழம்-கீரை வகைகள் ஆகிய அனைத்து வளங்களையும் உருவாக்குபவள் தான்யலட்சுமி. இவளுக்கு அன்னலட்சுமி என்ற பெயரும் உண்டு. திருமாலைப் பச்சைமால் என்பர். அவர் நிறத்திற்குக் காரணம் தான்ய லட்சுமியேயாகும். அவள் உலகப் பசுமைக்குத் தலைவி. ஆறு திருக்கரங்களைக் கொண்டவள். வலப்புறம் தானிய நெற்கதிர், அபய முத்திரை, அம்பு முதலியவற்றைக் கொண்டும், இடப்புறம் வில், கரும்பு, வரத முத்திரை முதலியவற்றைக் கொண்டும் விளங்குபவள். யானையைப் பீடமாகக் கொண்டவள். ஸ்ரீதான்யலட்சுமியை வணங்கி வழிபட்டால், களஞ்சியத்தில் எல்லாவித தான்யங்களும் நிறைவுடன் இருக்கும்.

  1. விஜயலட்சுமி

விஜயம் என்றால் வெற்றி என்று பொருள். வெற்றியை அருள்பவள் விஜயலட்சுமி. எடுத்த காரியங்களில் வெற்றிபெறச் செய்பவள். விஜயலட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. வாள், சார்ங்கம், சுதர்சன சக்ரம், சங்கு, கத்தி, கேடயம், அபயம், வரதம் போன்றவற்றைத் கையில் ஏந்தி அன்னத்தின் மீது அமர்ந்தருளும் கோலம் கொண்டவள். ஸ்ரீவிஜயலட்சுமி தேவியை வழிபட்டால் நம் வாழ்வில் தோல்வி, ஏமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கும் எதிலும் வெற்றிதான்.

  1. வீரலட்சுமி

மனத்திற்கு தைரியத்தை தருபவள் வீரலட்சுமி என்ற தைரியலட்சுமி. வாழ்வின் இன்பம், துன்பம் ஆகியவற்றை சமமாக பாவிக்கும் நிலையை அருளும் சக்தி இவள். தெளிவான, அத்தியாவசியமான முடிவெடுக்க, அதற்கான முயற்சி மேற்கொள்ள மனதுக்கு உறுதியளித்து அச்சத்தைத் தவிர்த்து வெற்றியை அருள்பவள் இவள். எட்டுத் திருக்கரங்களைக் கொண்டவள். வலது திருக்கரங்களில் அபயம், சூலம், அம்பு, சக்கரம் முதலியவற்றையும், இடது திருக்கரங்களில் வரதம், கபாலம், வில், சங்கம் முதலியவற்றையும் கொண்டு தாமரைப் பூவின் மீது வீற்றிருப்பாள். இவளை வழிபட மன உறுதி, துணிச்சல், வீரம், தைரியம், தன்னம்பிக்கை அளிப்பாள்.

  1. வித்யாலட்சுமி

வித்யை என்பதற்குக் கல்வி என்று பொருள். கல்விச் செல்வத்தை வழங்குவதனால் இவளுக்கு வித்யாலட்சுமி என்று பெயர். கலைமகள் மற்றும் அலைமகள் சேர்ந்த வடிவம் இவள். கல்வி, அறிவு, திறமை ஆகியவற்றை அருள்பவள். வெண்மை உருவுடையவள். இவளை வேண்டினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.

தொகுப்பு: மகி

The post இஷ்டங்களை பூர்த்தி செய்யும் அஷ்ட லட்சுமிகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED மனதிற்கினியான்