*ஆக்கிரமிப்பை தடுக்க வருவாய் நிலங்களாக மாற்ற வேண்டும்
*தமிழ்நாடு அரசுக்கு தேனி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை
கூடலூர் : தேனி, இடுக்கி மாவட்ட தமிழ்நாடு-கேரள எல்லைப் பகுதிகளில் தமிழ்நாடு நிலம் கேரளாவின் ஆக்கிரமிப்பில் இருப்பதால் நீண்ட காலமாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கும், தேனி-இடுக்கி மாவட்ட எல்லையை அளவீடு செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி, இடுக்கி மாவட்ட தமிழக-கேரள எல்லைப்பகுதியான கம்பம்மெட்டு, குமுளி, மூனாறு பகுதி தமிழக எல்லை வனப்பகுதியாகவும், கேரள எல்லை வருவாய் நிலமாகவும் உள்ளது. இதனால் தமிழக எல்லையில் கேரள அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் ஆக்கிரமிப்பு செய்தவற்கு எளிதாகிப்போனது.
1956ம் ஆண்டு மொழிவாரி மாநில பிரிவினையில் தமிழகத்தோடு இருந்த பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளம் பகுதி கேரள வசமானது. அப்போது கோட்டயம் மத்திய சிறையில் இருந்த கைதிகளை, பீர்மேடு, உடும்பன்சோலை, தேவிகுளத்தின் உட்பகுதிகளில் விவசாயம் செய்ய நிலம் கொடுத்து குடியேற்றினார் அன்றைய கேரள முதல்வராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளை. அந்த குடியேற்றம் 1980களில் வேகமெடுத்தது.
ஒருகட்டத்தில் குடியேற இடமில்லை என்றபோது தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்து குடியேற ஆரம்பித்தார்கள். தமிழக எல்லை வனப்பகுதியாக இருந்ததால், ஆக்கிரமிப்பு செய்ய அவர்களுக்கு எளிதாகிப் போனது.1994ம் ஆண்டு, உடும்பஞ்சோலை தாலுகாவில் உள்ள ஆசாரிபள்ளம் பகுதியில், 270 ஹெக்டேர் தமிழக வனப்பகுதிக்குள் அத்துமீறி விவசாயம் செய்தவர்களிடமிருந்து 150 ஹெக்டேர் நிலப்பரப்பை தமிழக வனத்துறையினர் மீட்டனர்.
மீதமுள்ள 120 ஹெக்டேர் நிலங்கள் இன்னமும் மீட்கப்படாமல் இருக்கிறது. அதுபோல் குமுளி முதல் போடிமெட்டு வரையிலான 70 கிலோமீட்டர் எல்லை வனப்பகுதியில், கேரளத்தை சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 1750 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, விவசாய நிலங்களாக மாற்றியதோடு, தங்கும் விடுதிகள், வீடுகள் கட்டியுள்ளனர். மேலும் இந்த ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் வழிபாட்டு தலங்களையும் கட்டி வைத்துள்ளனர்.
2014ம் ஆண்டு மே மாதம், உடுமஞ்சோலை தாலுகா தூக்கு பாலம் அருகே புஷ்பகண்டம் பகுதியில் தமிழக வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தமிழக வனத்துறை முதன்மை பாதுகாவலர், உடும்பஞ்சோலை தாசில்தாருக்கு எழுதிய கடிதம் இன்றுவரை கேரளா கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கேரள சுங்கத்துறை, கம்பம்மெட்டு தமிழக எல்லையில் கண்டெய்னர் அலுவலகத்தை வைத்தனர். இதை தட்டிக்கேட்ட தமிழக வனத்துறைக்கும், கம்பம்மெட்டு கேரள காவல்துறைக்கும் பிரச்னை ஏற்பட்டது.
நிலைமை மோசமடைந்ததும் தேனி-இடுக்கி மாவட்ட உயர் அதிகாரிகள் அமர்ந்து பேசி, இரு மாவட்ட எல்லையை அளவீடு செய்வது என்று முடிவு செய்தனர்.
2017 ஜூன் 7ம் தேதி தமிழகம் சார்பாக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ, கேரள தரப்பில் தேவிகுளம் சப்-கலெக்டர் முன்னிலையில் கம்பம்மெட்டு அருகே உள்ள மந்திப்பாறை, நாவல் பள்ளத்தில் தொடங்கி கல்லுவேலி எஸ்டேட் வரை எல்லையை நிர்ணயம் செய்து தமிழக வனத்துறை 14 எல்லை கற்களையும் இட்டது.
இறுதியாக கம்பம்மெட்டு சோதனைச் சாவடிக்கு வந்து இரண்டு மாநில அதிகாரிகளும் எல்லையை அளவீடு செய்யும் போது, கம்பம் மெட்டில் இருக்கும் கேரள காவல்துறை சோதனை சாவடி, சுங்கச்சவடி தமிழக எல்லைக்குள் இருப்பது தெரியவந்ததும் கேரள மாநில அதிகாரிகள் பின்வாங்கினர்.அடுத்த நாளில் அன்றைய இடுக்கி எம்பியாக இருந்த ஜோயிஸ் ஜார்ஜின் முன்னிலையில், அவரது அடியாட்கள் தமிழக வனத்துறை இட்ட எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தனர். அப்போது கேரள முன்னாள் முதல்வரான உம்மன் சாண்டி நாவல் பள்ளத்திற்கு வந்து எல்லைப் பகுதியை ஆய்வு செய்து விட்டு சென்றார்.
ஆனால் அன்று தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அதிமுக அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 2021 மார்ச்சில், குமுளி அருகே 2ம் மைல் தமிழக வனப்பகுதியில் 45 சென்ட் இடத்தை கேரள நபர் ஒருவர் ஆக்கிரமித்து அதை செல்போன் டவர் அமைக்க வாடகைக்கு விட்டார். இப்படி தமிழக வன எல்லைப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக கேரள அதிகாரிகளாலும், பொது மக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. எனவே நீண்ட காலமாக இழுபறியில் இருந்து கொண்டிருக்கும் தேனி- இடுக்கி மாவட்ட எல்லையை அளவீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் விகோரிக்கை விடுத்துள்ளனர்.
வருவாய் நிலங்களாக மாற்ற வேண்டும் இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறுகையில், ‘‘நீண்ட காலமாக இரு மாவட்ட எல்லை அளவீடு செய்யாமல் கிடப்பில் உள்ளது. கடந்த 2014 மற்றும் 2017ல் எல்லை அளவீடு செய்ய முயற்சி செய்தும் பின் அதை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. ஏற்கனேவே கம்பம்மெட்டு, குமுளி, மூனாறு தமிழக வனப்பகுதிகள் அதிகளவில் கேரளத்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக எல்லை வனப்பகுதியாக உள்ளதால் எளிதில் இது நடக்கிறது. எனவே தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி மற்றும் மாவட்ட முதன்மை வன அலுவலர் ஆகியோர் இடுக்கி கலெக்டரோடு கலந்து ஆலோசனை செய்து, தேனி-இடுக்கி மாவட்ட எல்லையை அளவீடு செய்ய வேண்டும். மேலும் கேரளாவைப்போல் தமிழக எல்லைப்பகுதியிலும் வருவாய் நிலங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியும்’’ என்றார்.
The post தமிழ்நாடு வனப்பகுதிகளில் கேரளாவின் ‘ஆக்கிரமிப்பு’ தேனி-இடுக்கி மாவட்ட எல்லையில் ‘அளவீடு’ அவசியம் appeared first on Dinakaran.