×

ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: ஆட்டநாயகன் ஹாரி புரூக் நெகிழ்ச்சி

கொல்கத்தா : ஐபிஎல் 16வது சீசனில் கொல்கத்தாவில் நேற்றிரவு சன்ரைசர்ஸ் ஐதராபாத்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீசியது. இதில் சன்ரைசர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் 55 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். கேப்டன் எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 50 ரன்களும், அபிஷேக் ஷர்மா 17 பந்துகளில் 32 ரன்களும், ஹென்ரிச் கிளாசன் 6 பந்துகளின் 16 ரன்களும் விளாசினர். இதனால் சன்ரைசர்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 228 ரன் குவித்தது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க வீரர் குர்பாஸ் டக் அவுட் ஆக, இம்பேக்ட் வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாகள களமிறக்கப்பட்ட சுனில் நரேன், கோல்டன் டக்கானார். இதனால் கொல்கத்தா அணி 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனையடுத்து, கேப்டன் நிதிஷ்ரானா பவர் பிளேவின் கடைசி ஓவரில் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் விளாசி 28 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் பவர்பிளேவில் கொல்கத்தா அணி 62 ரன்கள் சேர்த்தது. காயத்தால் அவதிப்பட்ட ஆண்டிரு ரசல் 3 ரன்னில் வீழ்ந்தார். தனி ஆளாக போராடிய நிதிஷ் ரானா 41 பந்துகளில் 75 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 3 ஓவரில் 58 ரன்கள் தேவைப்பட்டபோது களத்தில் ஹீரோ ரிங்கு சிங் மற்றும் ஷர்துல் தாகூர் இருந்தனர். இதில் புவனேஸ்வர் குமார் ஓவரில் 10 ரன்களை இந்த ஜோடி சேர்த்தது. இதனையடுத்து கடைசி 2 ஓவரில் 48 ரன்கள் தேவைப்பட்டது. நடராஜன் வீசிய 19வது ஓவரில் ரிங்கு சிங் சிக்சர் அடித்தார். அந்த ஓவரில் 16 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்திலேயே ஷர்துல் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் ரிங்கு சிங் 1 சிக்சர் மட்டுமே அடிக்க முடித்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 55 பந்தில் 12 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் ஆட்டமிழக்காமல் 100 ரன் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற சன்ரைசர்ஸ் அணி வீரர் ஹாரி புரூக் கூறுகையில், மிடில் ஓவர்களில் கேகேஆர் அணியால் சில பரபரப்பு ஏற்பட்டிருந்தாலும், இறுதியாக நாங்கள் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராக விளையாடுவதே சிறந்ததாக பலரும் கூறுவார்கள். நான் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடவும் தயாராக இருக்கிறேன்.

5ம் இடத்தில் களமிறங்கி அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறேன். ஐபிஎல் தொடரில் சதம் விளாசியதன் மூலம் எனது பெயரை அழுத்தமாக பதிவு செய்துவிட்டேன். இந்த சதத்தை விடவும் எனது 4 டெஸ்ட் சதங்கள் தான் சிறந்தது என்றே கருதுகிறேன். மைதானத்தில் ரசிகர்கள் கொண்டாட்டத்தையும் ஆரவாரத்தையும் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 3 போட்டிகளில் சிறப்பாக ஆடாததால் என் மீது நான் அழுத்தத்தை ஏற்படுத்தி கொண்டேன். சமூகவலைதளங்களில் என்னை குப்பை என்று பலரும் விமர்சித்தார்கள். இன்று இந்திய ரசிகர்கள் பலரும் எனது பேட்டிங்கை பார்த்து பாராட்டு தெரிவிக்கிறார்கள். ஆனால் சில நாட்களுக்கு முன் கசக்கி பிழிந்துவிட்டார்கள். அவர்களின் வாயை அடைத்ததால் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். முன்னதாக முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் புரூக் கூறுகையில், “எனது ஆட்டத்தை காண என் காதலி இங்கே இருக்கிறார். ஆனால் எனது குடும்பத்தினர் அனைவரும் ஓய்வுக்காக சென்றுவிட்டனர். அவர்கள் அனைவரும் எனது சதத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்’’ என்று நெகிழ்ந்தார்.

The post ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: ஆட்டநாயகன் ஹாரி புரூக் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Harry Brook ,Kolkata ,Sunraisers Hyderabad ,Knight Riders ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கு...