×

கோவில்பட்டி அருகே கோர விபத்து கார் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பலி-உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய போது பரிதாபம்

கோவில்பட்டி : கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதியதில் சிறுமி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு திரும்பிய போது இந்த கோர விபத்து நடந்தது.மதுரை ஒத்தக்கடை குலசேகரப்பேரியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி மகன் முகேஷ் (28). விருதுநகர் மாவட்டம் வில்லிபுத்தூரைச் சேர்ந்த முத்துமதி மகள் பேச்சியம்மாள் (17). இவர்கள் 2 பேரும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் காரில் வந்தனர். நேற்று காலை மீண்டும் மதுரை ஒத்தக்கடைக்கு அதே காரில் புறப்பட்டனர்.

காரை முகேஷ் ஓட்டினார். கோவில்பட்டி அடுத்த நக்கலன்முத்தம்பட்டி அருகே கார் வந்த போது, சிவகிரியிலிருந்து இளையரசனேந்தலுக்கு செங்கற்களை ஏற்றி வந்த லாரி, கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் அதிலிருந்த முகேஷ், சிறுமி பேச்சியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேசன், நாலாட்டின்புத்தூர் இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்ஐ ஆர்தர்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காரின் முன்பகுதி இடிபாடுகளுக்குள் 2 பேரின் உடல்களும் சிக்கியிருந்ததால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடப்பாரையால் உடைத்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய லாரி டிரைவரை நாலாட்டின்புத்தூர் போலீசார் தேடி வருகின்றனர். கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

The post கோவில்பட்டி அருகே கோர விபத்து கார் மீது லாரி மோதி சிறுமி உள்பட 2 பேர் பலி-உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு ஊர் திரும்பிய போது பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Kovilpatti ,Gora accident ,
× RELATED கோவில்பட்டி ஆர்டிஓ ஆபீசில் சுமை...