×

திங்கள்சந்தை அருகே தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி பரிதாப சாவு-மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை

திங்கள்சந்தை : திங்கள்சந்தை அருகே தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திங்கள்சந்தை அருகே பரசேரி பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(48). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி அனிதா (35) என்ற மனைவியும், தன்சிகா (11), அஸ்மிதா (9) என்ற 2 மகள்களும் உண்டு. இருவரும் அருகில் உள்ள அரசு பள்ளியில் முறையே 6ம் வகுப்பும், 4ம் வகுப்பும் படித்து வந்தனர். அனிதா அருகில் உள்ள ஒரு பேக்கரிக்கு வேலைக்கு சென்று வருகிறார். நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு.

கடந்த 3 நாளுக்கு முன்பு வீட்டில் இருந்த கிரைண்டரை நாகராஜன் எடுத்து விற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 12ம்தேதி இரவு அனிதா இரவு வேலையாக பேக்கரிக்கு சென்றார். அப்போது குடிபோதையில் இருந்த நாகராஜன் தூங்கி கொண்டு இருந்த 2 குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துவிட்டு தன்னுடைய உடலிலும் தீ வைத்தார். இதில் நாகராஜன் உடல் கருகி இறந்து விட்டார்.

தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய குழந்தைகள் 2 பேரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூத்த மகள் தன்சிகா நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மற்றொரு சிறுமியான அஸ்மிதா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் பரசேரி பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.

The post திங்கள்சந்தை அருகே தந்தையால் தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுமி பரிதாப சாவு-மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : market ,Tingalshandi ,Dingalshandi ,Dinakaran ,
× RELATED மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை...