×

5 மாதங்களுக்கு பிறகு ரபேல் வாட்ச் துண்டு சீட்டை வெளியிட்டார் அண்ணாமலை: வீட்டு வாடகை ரூ.45 லட்சம் உள்பட பல செலவுகளையும் நண்பர் அளிப்பதாக பேட்டி

சென்னை: ரபேல் வாட்ச்க்கான பில் என்று ஒரு துண்டு சீட்டை, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார். அப்போது தனது வீட்டு வாடகை பணம் ரூ.45 லட்சம் மற்றும் வாகனத்திற்கு டீசல், வீட்டு செலவு, வேலைக்காரர்களுக்கு சம்பளம் என அனைத்தையும் நண்பர்கள் ஏற்பதாகவும் அண்ணாமாலை கூறியுள்ளார். இது மேலும் பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, ரபேல் நிறுவனத்தின் வாட்ச்சை கட்டியிருப்பதாகவும், இதன் மதிப்பு ரூ.4 லட்சத்துக்கும் மேல் என்றும் தகவல்கள் வெளியாகின. மேலும், ரபேல் நிறுவனத்திடம் இருந்து வாங்கிய விமானத்தில் முறைகேடு நடைபெற்றதாக பாஜ முன்பு குற்றம்சாட்டியது. பின்னர் அதே ரபேல் நிறுவன விமானங்களை பாஜக அரசும் வாங்கியது. பாஜவின் இந்த முடிவு குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இப்படி பல குற்றச்சாட்டுகள் உள்ள நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட வாட்ச்சை அண்ணாமலை வைத்திருந்தது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு மொத்தமே 500 வாட்ச்களைதான் அந்த நிறுவனம் தயாரித்தது. அதில் 2 வாட்ச் மட்டுமே இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது. டாடா, அம்பானி ஏன் அதானி கூட இந்த வாட்ச்களை பயன்படுத்தவில்லை. அண்ணாமலை இதை பயன்படுத்தியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரூ.4 லட்சத்துக்கும் மேலான இந்த வாட்ச் வாங்க அண்ணாமலைக்கு எப்படி பணம் கிடைத்தது என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதனால் இந்த வாட்ச்க்கான பில்லை அண்ணாமலை வெளியிட வேண்டும் என்று கூறப்பட்டது. இது குறித்து பதில் அளித்த அண்ணாமலை, விரைவில் வெளியிடுவதாக கூறினார்.

தற்போது 5 மாதங்களுக்குப் பிறகு சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் அண்ணாமலை நேற்று காலையில் பில் என்று கூறி துண்டு சீட்டை வெளியிட்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பெங்களூரில் வேலை பார்க்கும் போது பெறப்பட்ட லஞ்ச பணத்தில் இந்த கைக்கடிகாரத்தை வாங்கியிருக்கிறேன் என அவதூறு கிளப்பப்பட்டது நான் அப்போது ஒரு சவாலை வைத்தேன். நான் பில்லை கொடுக்கும் போது, ஏப்ரல் 14ம் தேதி இந்த வாட்ச் பில்லை மட்டும் கொடுக்கப்போவது இல்லை. சில கேள்விகளையும் கேட்க போகிறேன் என்று சொன்னேன். நான் கேள்வி கேட்க வேண்டிய நேரம் இது. ஒரு வாரத்திற்கு பின்னர் என்னிடம் கேள்வியை பத்திரிகையாளர்கள் ேகட்கலாம். 20 அல்லது 21ம் தேதி பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அரசியல்வாதியாக ஒரு மாதத்திற்கு எனக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும்.

மாநில தலைவராக சாதாரணமாக 7 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். அண்ணாமலை சம்பாத்தியத்தில் 7 லட்சம், 8 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவு செய்ய முடியும். சுற்றியிருக்கக்கூடிய நண்பர்களின் உதவி, சுற்றியிருக்கக்கூடிய கட்சியினரின் உதவியை வைத்து நடத்தி கொண்டு இருக்கிறேன். 3 பிஏக்கள் இருக்கிறார்கள் என்றால், 3 பிஏக்களின் சம்பளத்தை நண்பர்கள் கொடுக்கிறார்கள். கார் இருக்கிறது. காருக்கான டீசலை கட்சி கொடுக்கிறது. சிஆர்பிஎப் பாதுகாப்பு வந்தவுடன் பெரிய வீட்டிற்கு வாடகைக்கு போனேன். அதற்கான வாடகையை இன்னொரு நண்பர் கொடுக்கிறார். ஐபிஎஸ் அதிகாரியானது முதல், நான் வாங்கிய சம்பளம் முதல் எனது வங்கி கணக்கில் உள்ளது. நான் எம்பிஏ படித்த போது 11 லட்சம் ரூபாய் கடனை கட்டுவதற்கு 7 ஆண்டுகள் சிரமப்பட்டு கடனை கட்டினேன்.

27.1.22 முதல் கிரெடிட் கார்டு பில் போன மாதம் வரை நான் கட்டிய பில், வாட்ச் விவரங்கள் அனைத்தையும் இணையதளத்தில் பார்ப்பீர்கள். அசாதாரண சூழ்நிலையில் மாநில தலைவராக பொறுப்பு ஏற்றேன். சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறேன். எந்த நேரத்திலும் கூட சொந்த ஊருக்கு செல்லத்தான் வேண்டும். காரணம் இது என்னுடைய சொந்த ஊர் இல்லை. நான் கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் உலகத்தில் 500 தான் இருக்கிறது. நான் அணிந்திருப்பது 147வது வாட்ச். ரபேல் விமானத்தை போன்று, இந்த வாட்ச் இருக்கும். இந்தியாவில் இந்த ரக வாட்ச் 2 தான் இருக்கிறது. ஒரு வாட்ச் மும்பையில் இருக்கும் தனியார் கம்பெனி அதிகாரி ஒருவர் கட்டியிருக்கிறார். 2வது வாட்ச், கோவை ரேஸ் கோர்சில் இருக்கும் சிம்சன் என்ற கம்பெனியில் விற்கப்பட்டிருக்கிறது. இந்த வாட்ச்சை மே மாதம் 27ம் தேதி வாங்கினேன். இந்த வாட்ச் சந்தையில் இல்லாததால் யாராலும் வாங்க முடியாது.

2021ம் ஆண்டு மார்ச் மாதம் கோவையில் இருக்கும் நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் தான் இந்த வாட்சின் ஓரிஜினல் ஓனர். ரபேல் போர் விமானம் வந்தபோது, இந்த வாட்சை கட்டவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ரபேல் வாட்ச் என்பதை தெரிந்து கொண்டு, சேரலாதன் ராமகருஷ்ணனை தொடர்புகொண்டு பேசினேன். சிம்சன் கம்பெனி நிர்வாகிகளும் உடன் இருந்தனர். அப்போது இந்த வாட்சை சேரலாதன் கொடுப்பதற்கு முன்வந்தார். அதற்கான ரசீது என்னிடம் இருக்கிறது. நான் ஐ.பி.எஸ். அதிகாரியாக கர்நாடகத்தில் பணியாற்றியபோது லஞ்சமாக வாங்கினார் என்று சொல்கிறார்கள். நான் அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் கோவையில் வாங்கப்பட்டது.

நான் அணிந்திருக்கும் வாட்ச் சீரியல் எண் அடிப்படையில் பார்த்தால், மார்ச் மாதத்துக்கு முன்பு எங்கேயும் விற்கப்படவில்லை. ரபேல் வாட்ச் வாங்கிய சேரலாதனை எனக்கு 2 வருடமாக தெரியும். மதிப்பும், மரியாதையும் அதிகம் என்பதால் இந்த வாட்ச்சை 2 வருடங்களாக அணிந்து கொண்டிருக்கிறேன். ரூ.3 லட்சத்துக்கு இந்த வாட்ச்சை வாங்கினேன். நான் யார் மீதும் புகார் தெரிவிக்கவில்லை. என்னிடம் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறேன். நான் ஒரே நாளில் பெரிய, பெரிய எதிரிகளை சம்பாதித்து விட்டேன். தமிழக அரசியலை பொறுத்தமட்டில் பேசாமல் இருப்பார்கள்.

பிரதமர் மோடி வரும் போது, கை கொடுப்பதற்காக நான் வரவில்லை. எங்கேயோ இருக்கும் தொண்டர்களை கை கொடுக்க வைப்பதற்காகத்தான் நான் வந்திருக்கிறேன். தமிழ்நாட்டில் மோடியை வரிசையில் நின்று பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எதற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்திருக்கிறேன். மாலையை போட்டுவிட்டு, கும்பிடு போட்டுவிட்டு, தேர்தலில் ஒன்றாக சேரும் அரசியல் எனக்கு சரிபட்டு வராது. ஒரு விஷயத்தை எதிர்க்கிறோம் என்றால் அடிப்படையில் இருந்தே எதிர்க்கவேண்டும் என வீதிக்கு வந்துவிட்டேன். எதிர்க்கக்கூடாது என்றால் டெல்லிக்கு சென்று அண்ணாமலையை மாற்றிவிட்டு வாருங்கள். சக்தி, தெம்பு, திராணி இருந்தால் மாற்றிவிட்டு வாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது பாஜ அமைப்பு பொது செயலாளர் கேசவவிநாயகம் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் உடன் இருந்தனர். அண்ணாமலை பேட்டியில் ரூ.3 லட்சம் ரொக்கமாக கொடுத்து வாட்ச் வாங்கியதாக கூறியுள்ளார். வருமான வரித்துறை சட்டம் 269படி ஒரு பொருள் வாங்கும்போது 2 லட்சத்துக்குள்தான் பணமாக கொடுக்க வேண்டும். அதற்கு மேல் பணமாக ெகாடுத்தாலோ, அப்படி கொடுத்ததை வாங்கினாலோ அது சட்டப்படி குற்றமாகும். 2 லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற சட்டத்தை அண்ணாமலை எப்படி மீறினார்? சிம்சன் அதிகாரிகள் மூலம் வாங்கியதாக கூறுவதால், அவர்கள் எப்படி இதற்கு சம்மதித்தார்கள். இதன் மீது வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • மாதம் ரூ.1.66 லட்சம் வழங்கிய ஜிஎஸ்வி நிறுவனம்
    அண்ணாமலையின் வங்கிக் கணக்கிற்கு சென்னை போரூர்-குன்றத்தூர் மெயின்ரோட்டில் உள்ள ஜிஎஸ்வி மைக்ரோ டெக் என்ற நிறுவனத்தில் இருந்து 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.4.85 லட்சம், அதன் பிறகு மாதா மாதம் ரூ.1.66 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தநேரத்தில் அண்ணாமலை மாநிலத் தலைவராகக் கூட இல்லை. ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆடு மேய்ப்பதாக கூறி வந்தார். அப்படி இருக்கும்போது ஏன் அந்த நிறுவனம் அண்ணாமலைக்கு மாதம் ரூ.1.66 லட்சம் வழங்கியது என்பதும் மர்மமாக உள்ளது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக விஜய் விக்னேஷ் ராஜா கணேஷ் ராஜா, கணேஷ்ராஜா வருண்ராஜா, அருள்ராஜன் கணேஷ் ராஜா ஆகியோர் உள்ளனர்.
  • எல்லாமே நண்பர்களின் கிப்ட் 7 மடங்கு மனைவி சம்பளம் எங்கே?
    அண்ணாமலை தற்போது சென்னையை அடுத்த பனையூரில் பிரமாண்ட சொகுசு பங்களாவில் தங்கியுள்ளார். அந்த வீட்டிற்கான ஒரு மாத வாடகை மூன்றே முக்கால் லட்சம். இதனால் ஆண்டுக்கு ரூ.45 லட்சமாகும். அவரது வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க செலவு, அவரது செலவு, 3 பிஏக்கள் செலவு, டிரைவர் சம்பளம் என்று பல்வேறு செலவுகளுக்கு மாதத்திற்கு பல லட்சம் ரூபாய் ஆகும். அவரே மாதம் ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று கூறியுள்ளார். அப்படி பல லட்சம் ரூபாய் செலவை நண்பர்கள் மாதம் மாதம் செய்கிறார்கள் என்று அண்ணாமலை சொல்கிறார். அப்படி நண்பர்கள் இருப்பது என்பதை ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

அப்படி நண்பர்கள் கிடைக்கவில்லையே என்று உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒன்று அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த போது இவர்களால் அவர்கள் பயனடைந்திருக்க வேண்டும் அல்லது அண்ணாமலையால் அவர்கள் காரியம் சாதித்து இருக்க வேண்டும் என்ற கேள்வியை ஆர்வலர்கள் எழுப்ப தொடங்கியுள்ளனர். ஓசிக்கு எந்த நண்பர் இப்படி செலவை ஏற்பார்கள் என்ற நியாயமான கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு முன்னர் அண்ணாமலை அளித்த பேட்டியில் தன்னைவிட தன் மனைவி 7, 8 மடங்கு சம்பாதிப்பதாக கூறியுள்ளார். அப்படி சம்பாதிக்கும்போது ஏன் நண்பர்களிடம் பணம் வாங்குகிறார். இதுவும் லஞ்சம்தானே என்கின்றனர்.

  • ரபேல் வாட்ச் சந்தேகங்கள்?
  1. கடந்த டிசம்பர் மாதம் சொன்ன வாட்ச் நம்பர் 149. நேற்று சொன்னது 147. உங்க வாட்ச் நம்பர் தான் என்ன?
  2. கோவை சேரலாதன் ராமகிருஷ்ணன் வாங்கிய வாட்ச் மாடலும், அவரிடமிருந்து அண்ணாமலை வாங்கிய வாட்ச் மாடலும் வெவ்வேறானவை.
  3. நான்கரை லட்ச ரூபாய்க்கு வாட்ச் வாங்கும் இடத்தில் கையில் எழுதி பில் தரமாட்டார்கள். கண்டிப்பாக கம்ப்யூட்டர் பில்தான் இருக்கும். இதனால், ஜிம்சன் பில் சரிதானா?
  4. உலகத்தில் 500 வாட்ச்தான். இந்தியாவில் இரண்டே இரண்டு வாட்ச் இருக்கும் போது, அரிதான‌ பொருட்கள் எல்லாம் நாளுக்கு நாள்‌ அதிகரிக்குமே தவிர விலை குறையாது. ஆனால் நாலரை லட்ச ரூபாய்க்கு வாங்கிய வாட்ச்சை 2 மாதத்தில் அதை ஒன்றரை லட்ச ரூபாய் குறைத்து 3 லட்சம் ரூபாய்க்கு யாராவது விற்பார்களா?.
  5. வருமான வரித்துறை சட்டம் 269படி ஒரு பொருள் வாங்கும்போது 2 லட்சத்துக்குள்தான் பணமாக கொடுக்க வேண்டும். அதற்கு மேல் பணமாக கொடுத்தாலோ, அப்படி ெகாடுத்ததை வாங்கினாலோ அது சட்டப்படி குற்றமாகும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யக்கூடாது என்ற சட்டத்தை எப்படி மீறினார்?. இதன் மீது வருமான வரித்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.
  6. வாட்ச் பில்லில் எச்எஸ்என்(HSN என்பது ஹார்மோனிஸ்டு சிஸ்டம் ஆஃப் பெயரிடலின் சுருக்கமாகும். HSN குறியீடு அல்லது ஒத்திசைக்கப்பட்ட பொருட்களின் விளக்கம் மற்றும் குறியீட்டு முறையானது சர்வதேச அளவில் வர்த்தகம் செய்யப்படும் ஒவ்வொரு பொருளையும் வகைப்படுத்த குறியீடுகளை வழங்குகிறது. ஆனால் இந்த பில்லில் அந்த குறியீடு இல்லை. எச்எஸ்என் குறியீடு இல்லாமல் பில் இருந்தால், அது ஜிஎஸ்டி சட்டப்படி குற்றமாகும்.
  7. அண்ணாமலை வாட்ச் வாங்கிய நாளில் வங்கி கணக்கில் இருந்து மூன்று லட்ச ரூபாய் பணம் யாருக்கும் செல்லவில்லையே? ஏடிஎம் மூலமும் எடுக்கப்படவில்லை. பின்னர் எப்படி ரூ.3 லட்சம் வந்தது. எப்படி சேரலாதனிடம் பணம் கொடுத்தீர்கள்? வாட்ச் வாங்கியதாக கொடுக்கப்பட்ட துண்டு சீட்டில் 2021 மே 27ம் தேதி என்று உள்ளது. அன்று அவரது வங்கிக் கணக்கில் இருந்து பெங்களூரு ஸ்விகிக்கு மட்டுமே ரூ.306, ரூ.898 செலவு
    செய்யப்பட்டுள்ளது.
  8. சேரலாதன் வாங்கிய பில்லில் வாட்ச் எண் பிஆர்ஓ394இபிஐ147 என்று பில்லில் உள்ளது. ஆனால் சேரலாதன் உங்களுக்கு கொடுத்ததாக கூறப்பட்ட பில்லில் பிஆர்ஓ394டிஏஆர்147 என்று உள்ளது. ஏன் இந்த முரண்பாடு? இவ்வாறு பல கேள்விகள் சமூக வலை தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post 5 மாதங்களுக்கு பிறகு ரபேல் வாட்ச் துண்டு சீட்டை வெளியிட்டார் அண்ணாமலை: வீட்டு வாடகை ரூ.45 லட்சம் உள்பட பல செலவுகளையும் நண்பர் அளிப்பதாக பேட்டி appeared first on Dinakaran.

Tags : Raphael ,Annamalai ,CHENNAI ,BJP ,state ,president ,Dinakaran ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்